2014-10-03 16:12:03

உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்த விபரங்கள்


அக்.03,2014. “குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் சூழலில் மேய்ப்புப்பணி சவால்கள்” என்ற தலைப்பில் இம்மாதம் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் மூன்றாவது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குறித்த விபரங்களை இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி.
அகிலத் திருஅவையின் நன்மைக்காக, இக்காலத்திற்கு ஏற்ற வழிகாட்டி முறைகளைக் கொண்டு மிகவும் முக்கியமான தலைப்பு குறித்து விவாதிப்பதற்காக இம்மான்றம் கூட்டப்படுகின்றது என்று கூறிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், இம்மான்றம் நடக்கும் முறை, இதில் பங்குகொள்ளும் பிரதிநிதிகள், இதன் முக்கிய தலைப்புகள் போன்ற விபரங்களை விளக்கினார்.
இந்த உலகின் தெருக்களில் திறந்த மனப்பாங்கு மற்றும் மறைப்பணி ஆர்வத்தை அதிகமாகக் கொண்டுள்ள ஒரு திருஅவையில் திருத்தந்தையுடன் ஆயர்கள் உடன்நடப்பதற்கு மேய்ப்புப்பணித் திட்டத்தை இம்மான்றத்துக்குத் திருத்தந்தை வகுத்துள்ளார் எனவும் கர்தினால் தெரிவித்தார்.
இரு வாரங்கள் நடக்கும் இம்மான்றத்தின் நிறைவில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவார் எனவும், இம்மான்றத்தில் ஐந்து கண்டங்களிலிருந்து 191 மாமன்றத் தந்தையர் கலந்து கொள்வார்கள் எனவும் கூறினார் கர்தினால்.
16 வல்லுனர்கள், திருமணமான தம்பதியர் உட்பட 38 பார்வையாளர்கள், 8 பிற கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் இதில் பங்குபெறுவர். கணவர் முஸ்லிமாகவும் மனைவி கத்தோலிக்கராகவும் உள்ள ஒரு தம்பதியரும் இதில் அடங்குவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.