2014-10-03 13:54:55

அக்.04,2014 புனிதரும் மனிதரே : இறைஇரக்க இயேசு வரலாறு (St. Faustina Kowalska)


அது 1931ம் ஆண்டு பிப்ரவரி 22, ஞாயிறு. அன்று இரவு போலந்து நாட்டின் Płock நகரில் வாழ்ந்த பவுஸ்தீனா கோவால்ஸ்கா என்ற அருள்சகோதரி தனது அறையில் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில், இயேசு வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். அவரது இதயத்திலிருந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் பாய்ந்து வந்தன. இயேசு, இறைஇரக்கத்தின் அரசராகத் தோன்றினார். அப்போது இயேசு, பவுஸ்தீனாவிடம், இப்போது நீ பார்க்கும் இந்த உருவம் போன்று வரைந்து அதற்குக் கீழே, இயேசுவே உம்மில் நம்பிக்கை வைக்கிறேன் என்று கையெழுத்திடு. இந்தத் திருவுருவம் முதலில் இந்தச் சிற்றாலயத்திலும், பின்னர் உலகெங்கிலும் வணங்கப்படட்டும். இந்தத் திருவுருவத்தை வணங்குபவரின் ஆன்மா ஒருபோதும் அழிவுறாது என உறுதி கூறுகிறேன்(தினசரிக் குறிப்பு 47). மேலும், இந்த ஆன்மா இவ்வுலகின் எதிரிகள்மேல் வெற்றிகொள்ள, குறிப்பாக, மரணநேரத்தில் வெற்றிகொள்ள உதவுவேன். எனது மகிமை போன்றே அந்த ஆன்மாவைப் பாதுகாப்பேன்(தினசரிக் குறிப்பு 48) என்று சொன்னார். பின்னர் இந்தக் காட்சி பற்றி மற்றோர் அருள்சகோதரியிடம் சொல்லி எப்படி வரைவது எனக் கேட்டார் பவுஸ்தீனா. அவருக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. பின்னர் 1933ம் ஆண்டு மே மாதத்தில் Łagiewniki நகரில் இறை இரக்க சபையில் இறுதி அர்ப்பணத்தை அளித்தார். அதன்பின்னர் Vilnius நகர் சென்று தனது சபையின் இல்லத்தில் காய்கறிகளைப் பயிரிடுதல் உட்பட தோட்ட வேலைகளைச் செய்துவந்தார். அந்நகரில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள், அதாவது 1936ம் ஆண்டு மார்ச் வரை தங்கியிருந்தார். இதற்குள் இறைஇரக்க இயேசுவை பலதடவைகள் காட்சி கண்டு அவரோடு உரையாடி வந்தார். அச்சயமத்தில் Vilnius இல்லத்துக்கு ஆன்மீக வழிகாட்டியாக வந்த அருள்பணியாளர் Michael Sopocko அவர்களிடம் பவுஸ்தீனா ஒப்புரவு அருள்சாதனத்துக்காகச் சென்றபோது தனது காட்சிகள் பற்றி விவரித்தார். இறைஇரக்க இயேசு திருவுருவப் படத்தை வரைவதற்கு இவரிடம் உதவி கேட்டார் பவுஸ்தீனா. இவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று முழுவதுமாகப் பரிசோதனை செய்தனர். பவுஸ்தீனா நல்ல உடல், உள்ள நலத்துடன் இருப்பதாக மனநல மருத்துவர் Helena Maciejewska கூறினார். பின்னர் அருள்பணியாளர் Michael பவுஸ்தீனாவுக்கு உதவத் தொடங்கினார். ஓவியர் Eugene Kazimierowski என்பவர் இறைஇரக்க இயேசு திருவுருவப் படத்தை வரைந்தார். 1934, ஜூனில் படம் வரைந்து முடிக்கப்பட்டது. இயேசு பவுஸ்தீனாவுக்கு காட்சியில் கூறியபடி(தினசரிக் குறிப்பு 49) உயிர்த்த ஞாயிறுக்கு அடுத்துவரும் ஞாயிறன்று ஆடம்பரமாக இப்படம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த ஞாயிறே இறைஇரக்க இயேசுவின் விழாவாகவும் சிறப்பிக்கப்பட்டது. 1978ல் திருஅவையால் இவ்விழா அங்கீகரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு வருகிறது. புனித பவுஸ்தீனா கோவால்ஸ்காவின் விழா அக்டோபர் 05. Helena Kowalska என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் போலந்தின் Głogowiecல் 1905ம் ஆண்டு பிறந்து 1938ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தனது 33வது வயதில் இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.