2014-10-02 16:15:52

முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை


அக்.02,2014. அனைத்துலக முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய நாடுகளுக்குள் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
முதியவர்களின் வருமானம், நலவாழ்வு, கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு, சாதகமான சமூகச்சூழல் போன்ற நான்கு அம்சங்களில் முதியவர்களின் நிலைமை குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் போன்ற இடங்களில் கவலைக்கிடமான நிலையிலேயே முதியவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் காரணமாக பாதிக்கப்பட்டு, மீண்டும் தங்களது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்ற குடும்பங்களில் முதியவர்களைப் பராமரிக்க முடியாதிருப்பதனால், அவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கிளிநொச்சி தர்மபுரம் பகுதியின் முதியோர் சங்கத் தலைவரான 70 வயதான குஞ்சிராமன் சிறிதரன் கூறினார். தங்களது கிராமத்தில் மட்டும் இவ்வாறு 20 பேர் வரையில் பிச்சை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உதவிப் பணமாக மாதம் 1000 ரூபாயும், 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 500 ரூபாயுமே அரசிடமிருந்து உதவி கிடைத்தாலும், அதிகரித்துள்ள இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு இந்தப் பண உதவி போதாத காரணத்தினாலேயே வறுமையில் வாடும் முதியவர்கள் பிச்சை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக குஞ்சிராமன் சிறிதரன் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.