2014-10-02 16:27:38

புனிதரும் மனிதரே : கர்ப்பிணித் தாய்மாரின் பாதுகாவலர்(St. Gerard Majella)


உலக மீட்பர் சபையின் அருள்சகோதரரான இத்தாலியரான ஜெரார்டு மஜெல்லா அவர்கள் ஒருநாள் பிரோபாஃலோ குடும்பத்தைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அச்சமயம் அவ்வீட்டில் அவரது கைக்குட்டை விழுந்துவிட்டது. அதைக் கவனிக்காமல் அவர் சென்ற பின்னர், அதைப் பார்த்த அந்த வீட்டு இளைஞிகளில் ஒருவர் விரைந்து சென்று அதை ஜெரார்டு அவர்களிடம் கொடுத்தார். அவரோ, “இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், ஒரு நாளைக்கு இது உதவும்” என்று சொல்லிச் சென்றார். பின்னர் அந்த இளைஞி திருமணமாகி கருவுற்று, குழந்தையைப் பெற்றெடுக்கவிருந்த சமயத்தில் அதிக வேதனையில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அப்பெண்ணுக்கு அந்தக் கைக்குட்டை நினைவுக்கு வர, அதை எடுத்து வருமாறு கூறினார். அதைக் கொண்டுவந்தவுடனேயே அப்பெண்ணின் வேதனை மறைந்து நலமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். இச்செய்தி எல்லா இடங்களிலும் பரவியது. ஏனெனில் அக்காலத்தில் மூன்று கர்ப்பிணித் தாய்மார்க்கு ஒருவர் வீதமே உயிருடன் குழந்தையைப் பெற்றெடுத்தனர். இந்தப் புதுமைக்குப் பின்னர் ஜெரார்டு மஜெல்லா அவர்களிடம் செபித்த கர்ப்பிணித் தாய்மார்க்குச் சுகப்பிரவசமும் கிடைத்தது. இதனால் ஜெரார்டு மஜெல்லா, கர்ப்பிணித் தாய்மாரின் பாதுகாவலர் எனப் போற்றப்படுகிறார். 1726ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, பசிலிக்காத்தா மாநிலத்தில் மூரோ லூக்கானோ என்ற ஊரில் பிறந்த ஜெரார்டு மஜெல்லா, தனது 12வது வயதில் தந்தையை இழந்தார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட இந்த ஏழைக் குடும்பத்தில் இளையவரான இவரைத் தையல் கற்றுக்கொள்ளும்படி இவரது தாய், தனது சகோதரரிடம் அனுப்பினார். எனினும் தனது மாமாவிடம் மிகவும் துன்புற்ற ஜெரார்டு, அனைத்திலும் மௌனம் காத்தார். தனது தையல் தொழிலில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியைத் தாயிடம் கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். 23வது வயதில் உலக மீட்பர் சபையில் அருள்சகோதரராகச் சேர்ந்த ஜெரார்டு, தோட்டவேலை, தையல், கோவில் வேலை, சமையல், தச்சுவேலை இப்படிப் பல வேலைகளைச் செய்தார். இவருக்கு 27 வயது நடந்தபோது ஒரு பெண் இவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினார். அப்போதும் மௌனம் காத்தார் ஜெரார்டு. ஆயினும் அப்பெண் பின்னர் தனது செயலுக்காக வருந்தினார். வாழும்போதே பல புதுமைகளைச் செய்த ஜெரார்டு மஜெல்லா, காச நோயால் பாதிக்கப்பட்டு 1755ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி காலமானார். மகிழ்ச்சியான குழந்தை பிறப்பின் புனிதர் என அழைக்கப்படும் இவர், 1904ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, திருத்தந்தை 10ம் பயஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.