2014-10-02 16:11:03

திருத்தந்தை : சிறுபான்மையினர் சித்ரவதைப்படுத்தப்படல் எவ்வகையிலும் நியாயமற்றது


அக்.02,2014. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களும் ஏனைய சிறுபான்மை மதத்தவர்களும் சித்ரவதைப்படுத்தப்படும்வேளையில், அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்து, துன்புறும் கிறிஸ்துவின் உடலாக அவர்களை நோக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கீழை வழிபாட்டுமுறை அசீரியன் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் நான்காம் Mar Dinkha அவர்களையும் அச்சபை பிரதிநிதிகள் குழுவையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் வரவேற்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவி பொதுமக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கொல்லப்பட்டுவருவதற்கு மத, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களைக் காட்டி எவரும் நியாயப்படுத்த முடியாது எனவும் கூறினார்.
கத்தோலிக்க திருஅவைக்கும் அசீரிய வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைக்கும் இடையே இடம்பெறும் இறையியல் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஆதரவை வழங்கும் அதேவேளை, இவ்விரு சபைகளும் இணைந்து ஒரே மேடையில் திருப்பலி நிறைவேற்றும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் முதுபெரும் தலைவர் நான்காம் Mar Dinkha அவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.