2014-10-02 16:06:53

திருத்தந்தை : காவல்தூதர்கள், நம் வாழ்வுப் பயணத்தில் உடன்வருபவர்கள்


அக்.02,2014. காவல்தூதர்கள் இருக்கின்றனர், அவர்கள் கற்பனைக் கோட்பாட்டின் கனிகள் அல்ல, அவர்களைக் கடவுள் நம் வாழ்வுப் பயணத்தில் நம் அருகில் வைத்திருக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காவல்தூதர்களின் விழாவாகிய இவ்வியாழன் காலையில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தூதர், சிறுபிள்ளை ஆகிய இரு உருவங்களை இந்நாளைய திருப்பலி வாசகங்கள் நமக்குமுன் வைக்கின்றன என்றும் கூறினார்.
நம்மைப் பாதுகாப்பதற்காக, கடவுள் ஒரு தூதரை நம் அருகில் வைத்திருக்கிறார், எனது சக்தியால் என்னால் நடக்க முடியும் என்று யாராவது நம்பினால் அவர் பெரிய தவறு செய்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, அத்தகைய நபர்கள், தாங்கள் பெரியவர்கள், தன்னிறைவு பெற்றவர்கள் என்று நம்பி, ஆணவத்தின் பயங்கரமான பொறியில் விழுகிறார்கள் என்றும் எச்சரித்தார்.
சிறுபிள்ளைகள் போன்று இருக்கவேண்டுமென்று இயேசு தம் சீடர்களுக்குப் போதித்தார், ஆயினும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற உள்பூசல் சீடர்களுக்குள் இருந்தது, முதல் ஆயர்களாகிய இவர்களுக்குள்ளும் சுயமுன்னேற்றம் குறித்த சோதனை இருந்தது, ஆயினும் இதுதான் எதார்த்தம் என்றும் இவ்வியாழன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
சிறுபிள்ளையின் மனநிலை இருக்க வேண்டுமென்று இயேசு சீடர்களுக்குப் போதித்தார் என்றும், ஏனெனில் சிறுபிள்ளை, பணிவானது, அறிவுரையும் உதவியும் தேவைப்படுவதன் அடையாளமாக சிறுபிள்ளை இருக்கின்றது, எனவே பெரியவராக இருக்க விரும்புபவரின் பாதை இதுவே என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறுபிள்ளையின் மனநிலையைக் கொண்டிருப்பவர்கள் வானகத் தந்தைக்கு நெருக்கமாக இருக்கிறார்கள், அவர்கள், திறந்த மற்றும் பணிவான இதயத்துடன் காவல்தூதர்களுக்குச் செவிசாய்க்கின்றனர் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
தனியாக யாரும் பயணம் செய்வதாகவோ, தனியாக இருப்பதாகவோ யாரும் நினைக்கக் கூடாது, ஏனெனில் காவல்தூதர் எப்பொழுதும் உடன் இருக்கிறார், இந்தக் காவல்தூதரோடு நமக்குள்ள உறவு எப்படிப்பட்டது எனச் சிந்திப்போம் என விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், “மாமன்றம் என்றால் ஒன்றுசேர்ந்து நடப்பதாகும், ஆனால் மாமன்றம் என்றால் ஒன்றுசேர்ந்து செபிப்பதுமாகும். எல்லா விசுவாசிகளும் எங்களோடு சேர்ந்து செபிக்குமாறு கேட்கிறேன்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இவ்வியாழன் டுவிட்டரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.