2014-10-01 16:16:18

தூய சவேரியாரின் திருப்பண்ட அருங்காட்சிய நிகழ்வுக்கு ஆன்மீகத் தயாரிப்புகள்


அக்.01,2014. இந்தியாவின் கோவாவில் தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு ஆன்மீகத் தயாரிப்புகள் தொடங்கியுள்ளன என்று, கோவா-டாமன் உயர்மறைமாவட்டம் அறிவித்தது.
“தூர கிழக்கின் திருத்தூதர்” எனப்படும் தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருஉடல் 2014ம் ஆண்டு நவம்பர் 22 முதல் 2015ம் ஆண்டு சனவரி 4 வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் நிகழ்வுக்காக, மறைக்கல்வியும் ஆன்மீகப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாக, இந்நிகழ்வுக் குழுவின் தலைவர் அருள்பணி ஆல்பிரட் வாஸ் அவர்கள் தெரிவித்தார்.
கத்தோலிக்கருக்கு இந்நிகழ்வு ஒரு முக்கியமான விசுவாசக் கொண்டாட்டம் ஆகும் எனவும், கோவா-டாமன் உயர்மறைமாவட்டம் தனது விசுவாசிகளுக்கு ஆன்மீகப் பயிற்சிகளை அளித்து வருகிறது எனவும் கூறினார் அருள்பணி ஆல்பிரட் வாஸ்.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டத்தைப் பார்வையிடுவதற்கு, இலட்சக்கணக்கான திருப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2004ம் ஆண்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்காக, 25 இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் கோவா வந்தனர்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.