2014-10-01 16:16:39

துருக்கி காரித்தாஸ் நிறுவனத்தின் பணிகள்


அக்.01,2014. சிரியாவின் ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் தீவிரவாதிகள், குர்த் இனத்தவர் வாழும் பகுதிநோக்கி முன்னேறி வருவதை முன்னிட்டு அங்கிருந்து துருக்கிக்குச் சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான குர்த் இனத்தவர்க்கு உதவி செய்வதற்கு துருக்கி காரித்தாஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
துருக்கியில் ஏற்கனவே எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டினர் அகதிகளாக வாழுகின்றனர் என ஐ.நா.வின் UNHCR புலம்பெயர்ந்தோர் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை இவ்வாண்டு முடிவதற்குள் 15 இலட்சத்தை எட்டும் எனவும் ஐ.நா. எதிர்பார்க்கிறது. மேலும், ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஈராக்கியர்களும் அகதிகளாகப் பதிவுசெய்வதற்குக் காத்திருக்கின்றனர், இன்னும் பலர் எல்லையைக் கடப்பதற்குக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அவசரகால உதவி, கல்வி, முன்னேற்றம், சமூக ஆதரவு போன்றவற்றை இம்மக்களுக்குச் செய்து வருகிறது துருக்கி காரித்தாஸ் நிறுவனம்.
இதற்கிடையே, மோசுல், நினிவே பகுதிகளிலிருந்து வந்துள்ள கிறிஸ்தவ அகதிகள் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் உள்ளத்தை உருக்குகின்றன என, துருக்கி காரித்தாஸ் நிறுவனத் தன்னார்வப் பணியாளர் Chiara Rambaldi, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.