2014-10-01 15:55:30

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


அக்.01,2014. இப்புதன் மறையுரைக்குச் செவிமடுக்கக் கூடியிருந்த கூட்டத்தில் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த குழுக்களும் இடம்பெற்றிருந்தன. திருஅவை குறித்த நம் மறைகல்விப் போதனையில் இன்று, தூய ஆவியின் கொடைகள் குறித்து நோக்குவோம் என தன் புதன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஆவியின் பலதரப்பட்ட கொடைகள், இயேசுவின் மறையுடலாம் திருஅவையை உயிரோட்டமுடையதாகவும் வளமுடையதாகவும் மாற்றுகின்றன. இந்தக் கொடைகளுள் ஒன்றுதான் தனிவரம் என்பது. முழு சமூகத்தின் விசுவாசிகள் மீது தூய ஆவியானவர் எவ்வித நிபந்தனையுமின்றி வாரி வழங்கும் அருளே தனிவரமாகும். தனியார்களுக்கு வழங்கப்படும் இக்கொடைகள், திருஅவை சமூகத்தால் கண்டுகொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. தன் குழந்தைகள் மீது இறைவன் கொண்டுள்ள அளப்பரிய அன்பின் அடையாளமாக இருக்கும் இக்கொடைகள் பல்வேறுதரப்பட்டவைகளாகவும் வளம் நிரம்பியவைகளாகவும் இருக்கும் அதேவேளை, ஒவ்வொன்றும் திருவையை விசுவாசம் மற்றும் அன்பின் சமூகமாகக் கட்டியெழுப்ப உதவுவதற்கென வழங்கப்படுகின்றன. தூய ஆவியானவரின் கொடைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபாடுடையவைகளாகக் காணப்படுவதே, அவைகள் அனைவரின் நலனுக்கென தாராள மனத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே. இவைகள் ஒருநாளும் பிரிவினைகளின் ஆதாரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது. இறையருளில் நாம் வளர்ந்து மேலும் உறுதியான, இறைவனின் முடிவற்ற அன்பின் சாட்சியமாகவும், நம்பத்தகும் அடையாளமாகவும் விளங்கவும், திருஅவை தன் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் உதவும் தூய ஆவியானவரின் கொடைகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து ஏற்றுக்கொள்ள நமக்கு உதவுமாறு இந்நாளில் இறைவனை நோக்கி நாம் சிறப்பான விதத்தில் செபிப்போம். நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பெற்றுள்ள தனிக்கொடைகள் குறித்தும், அதனை இவ்வுலகில் திருஅவையின் ஒன்றிப்பு,வாழ்வு மற்றும் மறைப்பணிக்கென எவ்விதத்தில் பயன்படுத்த உள்ளோம் என்பதையும் சிறப்பான விதத்தில் சிந்திக்க நாம் அழைப்புப் பெறுகிறோம்.
இவ்வாறு, தன் இப்புதன் பொதுமறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.