2014-10-01 16:16:07

இந்து-முஸ்லிம் மோதல்கள் நிறுத்தப்பட பூனே ஆயர் வேண்டுகோள்


அக்.01,2014. கடந்த வார இறுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் பலர் காயமடைந்துள்ளவேளை, மதங்களுக்கு இடையேயான வன்முறை முடிவுக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார் இந்திய ஆயர் ஒருவர்.
முகநூலில் இஸ்லாமுக்கு எதிரான உருவம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து, வாதோதாராவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் இருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர் மற்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்நகர காவல்துறை 140 பேரைக் கைது செய்துள்ளது.
இவ்வன்முறை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய பூனே ஆயர் தாமஸ் தாப்ரே அவர்கள், இந்தியா எந்த ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தை வைத்தோ, எந்த ஒரு மத நம்பிக்கையை வைத்தோ அமைக்கப்படவில்லை என்பதால், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வு மோலோங்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இந்தியாவை அமைப்பதற்கு இந்துக்கள் ஆற்றியுள்ள அளப்பெரிய பங்கை நன்றியுடன் நினைக்கும் அதேவேளை, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சி மதத்தினர் என, பிற மதத்தவராலும் இந்தியா கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதையும் நினைவுகூர வேண்டுமெனக் கேட்டுள்ளார் பூனே ஆயர் தாமஸ் தாப்ரே.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.