2014-09-29 14:05:12

புனிதரும் மனிதரே : தவறிழைக்காமல் குற்றம் சுமத்தப்பட்டவர்(St.Lorenzo Ruiz)


பிலிப்பீன்ஸ் நாட்டில் இஸ்பானியர்களின் காலனி ஆதிக்கம் நடந்துவந்த காலத்தில், 1636ம் ஆண்டில் ஒருநாள், இஸ்பானியர் ஒருவரை யாரோ ஒருவர் கொலை செய்துவிட்டார். ஆனால் அந்தக் கொலைக் குற்றம் பிலிப்பீன்ஸ் நாட்டவரான லொரென்சோ ருய்ஸ் என்பவர்மீது விழுந்தது. அப்போது முப்பது வயதைக்கூட எட்டாத லொரென்சோ, Binondo ஆலயத்தில் கணக்கராக வேலை செய்து வந்தார். மேலும், அவருக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். தன்மீது சந்தேகிக்கப்படும் கொலைக் குற்றத்துக்காக, தனக்கு மரண தண்டனை கிடைக்கக்கூடும் என்று பயந்த லொரென்சோ நாட்டைவிட்டு வெளியேற நினைத்து துறைமுகம் சென்றார். அங்கு நின்ற கப்பலுக்குள் சாமிநாதர் துறவு சபையின் புனித அருள்பணியாளர்கள் Antonio Gonzalez, Guillermo Courtet, Miguel de Aozaraza, இன்னும், Vicente Shiwozuka de la Cruz என்ற ஒரு ஜப்பானிய அருள்பணியாளரையும், கியோட்டோ நகர் தொழுநோயாளி லாசரோ ஆகிய ஐவரையும் கண்டு தனது நிலையை விளக்கி தன்னையும் அவர்களோடு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினார் அவர். அவர்களும் லொரென்சோவை ஏற்றுக்கொண்டனர். கப்பல் ஜப்பானுக்குப் புறப்பட்டது. அச்சமயம், ஜப்பானில் Tokugawa shogunate என்பவர் கிறிஸ்தவர்க்கெதிரான கடும் அடக்குமுறைகளை நடத்தி வந்தார். இது தெரிந்துதான் பிலிப்பீன்சிலிருந்து அந்த அருள்பணியாளர்கள் ஜப்பானுக்குச் சென்றனர். 1636ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி கப்பல் Okinawa வந்து சேர்ந்தது. உடனடியாக இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டு சென்று, அவர்கள் நாகசாகிக்கு மாற்றப்பட்டு, பலவிதமாகச் சித்ரவதைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பின்னர் 1636ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, லொரென்சோவும் அவரோடு இருந்தவர்களும் Nishizaka குன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு குழியில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டனர். இந்தவித சித்ரவதைக்கு, ஜப்பானிய மொழியில், tsurushi என்று பெயர். இது மிகவும் வேதனை நிறைந்தது. இந்நிலையில் குற்றவாளியின் ஒரு கையை மட்டும் கட்டாமல் விடுவார்கள். காரணம் குற்றவாளிகள், வேதனையின் உச்சத்தில் மனது மாறி விசுவாசத்தை மறுதலிக்கக்கூடும் என்பதால். லொரென்சோ கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்துவிட்டார். எனவே இவர் பெருமளவாக இரத்தம் சிந்தி கொடிய வேதனைப்பட்டு இறந்தார். அவரது உடலை எரித்து சாம்பலைக் கடலில் வீசினர். "நான் ஒரு கத்தோலிக்கன். இயேசுவுக்காக முழுமனத்துடன் மரணத்தை ஏற்கிறேன். எனக்கு ஆயிரம்முறை வாழ்வு வந்தாலும் அவற்றை நான் இயேசுவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று சொல்லி லொரென்சோ உயிர்விட்டதாகச் சொல்லப்படுகிறது. பிலிப்பீன்சின் முதல் புனிதராகிய மறைசாட்சி லொரென்சோ ருய்ஸ், 1987ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார். வத்திக்கானுக்கு வெளியே திருத்தந்தை நிகழ்த்திய முதல் அருளாளர் நிகழ்வும் இப்புனிதருக்கே. இப்புனிதரின் விழா செப்.28.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.