2014-09-27 15:49:19

முதியோர் தின திருப்பலியில் திருத்தந்தை பெனடிக்ட்


செப்.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று முதியோருக்கு நிகழ்த்தும் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய நாற்பதாயிரம் முதியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிகழ்த்தும் திருப்பலியில், 87 வயதாகும் முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்வார்.
இத்தாலி, இந்தியா, அர்ஜென்டீனா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயதான அருள்பணியாளர்களும் திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவார்கள் என்று, திருப்பீட குடும்ப அவை அறிவித்துள்ளது.
அக்டோபர் முதல் தேதி அனைத்துலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, திருப்பீடம் இஞ்ஞாயிறன்று அந்நாளைச் சிறப்பிக்கின்றது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “நம்மையும், நம் விருப்பங்களையும் நம் வாழ்வின் மையமாக வைப்பதற்குரிய மனநிலை இருக்கின்றது. இது மனிதப் பண்புதான். ஆனால் இது கிறிஸ்தவப் பண்பு அல்ல” என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.