2014-09-27 15:58:32

தென்சூடானில் சண்டை தொடர்ந்தால் மனிதாபிமானப் பேரிடர் ஏற்படக்கூடும்


செப்.27,2014. தென்சூடானில் சண்டை தொடர்ந்து இடம்பெற்றால் மனிதாபிமானப் பேரிடர் ஏற்படக்கூடும் என அந்நாட்டு ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்சூடானின் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் எத்தியோப்பியாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளவேளை, ஜூபாவில் கூட்டம் நடத்திய தென்சூடான் ஆயர்கள், அந்நாட்டின் அனைத்து வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமாறும், போர் நன்னெறிக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளனர்.
ஆயர்களாகிய தாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, ஆனால் மேய்ப்பர்கள், எனவே இறந்துகொண்டிருக்கும் விசுவாசிகளுக்காகக் குரல் கொடுக்கிறோம் எனவும், சண்டை மேலும் தொடர்ந்தால் துன்புறும் மக்களின் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென்சூடானில் இடம்பெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூறாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
தென்சூடான், 2011ம் ஆண்டில் சூடானிலிருந்து பிரிந்து தனிநாடானது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.