2014-09-27 15:49:29

திருத்தந்தை : அமைதியை ஏற்படுத்த அஞ்ச வேண்டாம்


செப்.27,2014. அமைதி, இணக்கவாழ்வு, ஒப்புரவு, ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கு அஞ்ச வேண்டாம், ஏனெனில் அவை இழப்போ, தோல்வியோ அல்ல, மாறாக வெற்றியே என்று, வெனெசுவேலா நாட்டுக்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெனெசுவேலாவில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த அனைத்துலக அமைதி வாரத்துக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் அமைதிச்சுடர் இருப்பதால், உலகில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த அனைத்துலக அமைதி வாரக் கூட்டத்தில், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், யூதர், முஸ்லிம்கள் என, பலமதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வெனெசுவேலா தலைநகர் கரகாஸ் திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்தோ ஜோர்தானோ அவர்களுக்கு, திருத்தந்தையின் இச்செய்தி அனுப்பப்பட்டு, இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
மேலும், இயேசு சபை மறைப்பணியாற்றுவதற்கு மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் இயேசு சபையினர் ஜேசு ஆலயத்தில் இச்சனிக்கிழமை மாலை நடக்கும் நன்றித் திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வது அவரது சனிக்கிழமை நிகழ்வில் உள்ளது.
1773ம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட இயேசு சபை, 1814ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அத்தடை அகற்றப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.