2014-09-27 15:32:54

செப்டம்பர் 28, புனிதரும் மனிதரே - "தொழுநோயுற்றோரின் திருத்தூதர்" (St. Damien de Veuster)


தொழுநோயால் பாதிக்கப்பட்டோரை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதற்கு 'ஹவாய் தீவுகளி'ல் ஒன்றான மோலக்காய் (Molokai) தீவு 19ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. அத்தீவில் ஒதுக்கப்பட்டிருந்த மக்களுக்குப் பணியாற்ற 1873ம் ஆண்டு, டேமியன் என்ற இளம் அருள் பணியாளர் சென்றார்.
1840ம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டில் பிறந்த டேமியன், தன் 20 வது வயதில் திருஇருதய அருள் பணியாளர்கள் துறவு சபையில் சேர்ந்தார். தன் 33வது வயதில், அருள் பணியாளராக திருநிலை பெற்றதும், இவர் மோலக்காய் தீவில் பணியாற்றச் சென்றார்.
அத்தீவில் ஒதுக்கப்பட்டிருந்த மக்களிடம் விளையாட்டு, இசை ஆகியத் துறைகளில், இயல்பாகவே விளங்கிய ஆர்வத்தை உணர்ந்த அருள்பணி டேமியன் அவர்கள், பல இசை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் அவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். தொழுநோயால் தங்கள் கைவிரல்கள் சிலவற்றை இழந்த இருவர், தங்களிடம் மீதம் இருந்த பத்து விரல்களால், 'ஆர்கன்' எனப்படும் இசைக் கருவியை, கோவில் வழிபாடுகளில் இணைந்து இசைத்து, புகழ்பெற்றனர்.
தொழுநோய் முற்றிய நிலையில் இருந்த ஒரு சில நோயாளிகளின் காயங்களில் வீசிய துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாது, அவர்கள் காயங்களுக்கு மருந்திட்டு, பராமரித்தார் அருள்பணி டேமியன். கனிவுடன், கருத்துடன் அவர் அக்காயங்களுக்கு மருந்திட்டு கட்டுவதைக் கண்ட ஒரு நோயாளி, "மென்மையான மலர்களைக் கொண்டு, அலங்காரம் செய்யும் ஒரு கலைஞனைப் போல, அருள்பணி டேமியன் அவர்கள் அக்காயங்களுக்கு மருந்திடுவார்" என்று கூறினார்.
1873ம் ஆண்டு முதல் தொழுநோயாளர் பணியில் தன்னையே கரைத்துக் கொண்ட அருள்பணி டேமியன் அவர்கள், பலமுறை தன் மறையுரைகளில், "தொழுநோயாளர்களாகிய நீங்கள்" என்று குறிப்பிட்டு வந்தார். ஆனால், 1889ம் ஆண்டு, ஒருநாள் "தொழுநோயாளர்களாகிய நாம்" என்று அவர் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
ஆம், 16 ஆண்டுகள் பணிக்குப் பின், அருள்பணி டேமியன் அவர்கள் தொழுநோயால் தானும் பாதிக்கப்பட்டார். 1889ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இறைவனடி சேர்ந்த அருள்பணி டேமியன் தே வூஸ்டர் (Damien de Veuster) அவர்களை, 1995ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். "தொழுநோயுற்றோரின் திருத்தூதர்" என்றழைக்கப்படும் முத்திப்பேறு பெற்ற டேமியன் அவர்களை, 2009ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புனிதராக உயர்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.