2014-09-26 16:13:12

வன்முறையை நியாயப்படுத்த மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பல்சமயக் குழு


செப்.26,2014. வட ஈராக்கிலும், சிரியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் இடம்பெறும் மனதை வருத்தும் வன்முறைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அகற்றப்படுவதற்கு ஒன்றிணைந்த முயற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது பல நாடுகளின் பல்சமயத் தலைவர்கள் குழு ஒன்று.
ஆஸ்ட்ரியா, சவுதி அரேபியா, இஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டு இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பகுதிகளில் நிலையான அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு உரையாடலே ஒரே பாதை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடலை ஊக்குவித்து மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, KAICIID என்ற அரசர் Abdullah Bin Abdulaziz அனைத்துலக மையத்தின் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வன்முறைகளும், மனிதாபிமான நெருக்கடிகளும் இடம்பெறும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
KAICIID மையத்தில், திருப்பீடத்தின் சார்பில் பார்வையாளராக இருக்கும் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot அவர்களும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.