2014-09-26 15:57:56

செப்.27,2014. புனிதரும் மனிதரே : இலவச மருத்துவர்கள்(Sts. Cosmas & Damian)


மூன்றாம் நூற்றாண்டில் துருக்கி நாட்டின் சிலிசியாவில் Iskanderun அராபிய வளைகுடாப் பகுதியின் Ayash துறைமுகப் பகுதியில் கோஸ்மாஸ், தமியான் என்ற இரு சகோதர மருத்துவர்கள் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தனர். கிறிஸ்தவர்களான இவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகள் அனைவருக்கும், செல்வந்தரோ, ஏழைகளோ அனைவருக்கும் காசின்றி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் இவர்கள் "காசில்லாதவர்கள்" என அழைக்கப்பட்டனர். கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்புவதற்கு இந்த முறையை இவர்கள் கையாண்டனர். சிலிசியாவில் பிறந்த கோஸ்மாஸ், தமியான் சகோதரர்களிடம் வந்த நோயாளிகள் எல்லாருமே குணமடைந்தனர். இவர்களின் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. உரோமைப் பேரரசர் தியோக்ளோசியனின் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறை தொடங்கியபோது, ஆளுனர் Lysias, கோஸ்மாஸ், தமியான் சகோதரர்களைக் கைது செய்து கிறிஸ்துவை மறுதலிக்குமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர்கள் இணங்கவில்லை. நீரிலும், நெருப்பிலும், போடப்பட்டனர். காற்றைச் செலுத்தி துன்புறுத்தப்பட்டனர். சிலுவையில் அறையப்பட்டனர். ஆனால் இந்த அனைத்துச் சித்ரவதைகளிலிருந்தும் எவ்விதக் காயமுமின்றி அற்புதமாக இவர்கள் காப்பாற்றப்பட்டனர். இறுதியில் கத்தியால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். இவ்விரு மருத்துவ சகோதரர்களோடு, இவர்களின் மற்ற மூன்று சகோதரர்களாகிய Anthimus, Leontius, Euprepius ஆகியோரும் இவர்களோடு சேர்ந்து கொல்லப்பட்டனர். கி.பி.287ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இந்த ஐவரும் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டனர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் உடல்கள், சிரியா மாட்டின் சைரஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டன. பின்னர் 6ம் நூற்றாண்டில் பேரரசர் முதலாம் ஜூஸ்தீனியன்(527-565), சைரஸ் நகரை இம்மறைசாட்சிகளுக்கு அர்ப்பணித்தார். மறைசாட்சிகள் கோஸ்மாஸ், தமியானிடம் செபித்ததால் ஆபத்தான நோய்களிலிருந்து மக்கள் குணமானார்கள். ஆதலால், கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தில் இவர்கள் பெயரால் ஆலயம் எழுப்பப்பட்டது. உரோமையில் திருத்தந்தை 4ம் பெலிக்ஸ்(526-530), மறைசாட்சிகள் கோஸ்மாஸ், தமியான் பெயரால் மொசைக் வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயத்தைக் கட்டினார். இரட்டைப் பிள்ளைகள் எனவும் சொல்லப்படும் மறைசாட்சிகள் கோஸ்மாஸ், தமியான், மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் பாதுகாவலர்களாகப் போற்றப்படுகின்றனர். சில நேரங்களில் மருத்துவக் குறிப்புக்கும் இவர்களது உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மறைசாட்சிகள் கோஸ்மாஸ், தமியான் விழா செப்டம்பர் 26.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.