2014-09-26 16:04:42

சிறார் உரிமைகள் குறித்த திருப்பீட பிரதிநிதிகள் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை


செப்.26,2014. சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. குழுவுக்குத் திருப்பீட பிரதிநிதிகள் குழு கடந்த பிப்ரவரியில் சமர்ப்பித்த கருத்துக்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையை திருப்பீட பத்திரிகை அலுவலகம் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.
திருப்பீடம், வத்திக்கான் நாட்டுக்குள் முழு நிலப்பகுதி சார்ந்த தன்னாட்சியை மட்டுமே செயல்படுத்துகின்றது என்றும், பிற நாடுகளில் இருக்கின்ற தல கத்தோலிக்கத் திருஅவைகள் மற்றும் நிறுவனங்கள்மீது மேற்கூறப்பட்ட கொள்கைகளைத் திணிப்பதற்கு, சட்டப்படியான கடமையையோ, திறனையோ திருப்பீடம் கொண்டிருக்கவில்லை என்றும் அத்திருப்பீடக் குழு, ஐ.நா. குழுவுக்கு நினைவுபடுத்தியுள்ளது.
இந்த ஐ.நா. குழுவின் சில பரிந்துரைகள், சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக கோட்பாடுகளைப் புறக்கணிக்கின்றன எனவும், சிறார் உரிமைகள் குறித்த உடன்பாட்டில் இல்லாத புதிய முரண்பாடான வெளிப்பாடுகள் குறித்து திருப்பீடம் கவலையடைவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள திருப்பீடம், அனைத்துலக சட்டத்துக்கு கட்டுப்பட்டது என்ற உணர்வில், அனைத்துலக நீதித்துறை அமைப்புக்குள் தனது நிலைமை பற்றி நன்கு அறிந்திருக்கின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.