2014-09-25 15:46:00

பாகிஸ்தானில் கிறிஸ்தவப் போதகர் சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை


செப்.25,2014. பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்யானக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் போதகர் Zafar Bhatti சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிறைக்காவலர்களாலும் உடன் கைதிகளாலும், தான் மிரட்டலுக்கு உள்ளாகி வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டிருந்தார்.
ராவல்பிண்டியின் Adyala சிறையில் குண்டுக் துழைத்த காயங்களுடன் இவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றிக் கூறும் ஆசியா நியூஸ் செய்தி நிறுவனம், பாகிஸ்தானில் சட்ட விரோத மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதன் மேலும் ஓர் உதாரணம் என, இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் தேவ நிந்தனைக்குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட 45 வயதான Zafar Bhatti மீதான குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையே, மதநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானிய சிறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த முஹம்மத் அஸ்கர் என்னும் 70 வயதான கைதி ஒருவர் காவல்துறையைச் சார்ந்த ஒருவரால் சுடப்பட்டு, கடுமையாக காயமடைந்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.