2014-09-25 15:35:17

திருத்தந்தை : தற்பெருமைக்குள் உங்களை இழந்துவிடாதீர்கள்


செப்.25,2014. மக்கள் உங்களைப் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்து தற்பெருமைக்குள் உங்களை இழந்துவிடாதீர்கள் என்ற அறிவுரையை உள்ளடக்கியதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரை இருந்தது.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, நீங்கள் நோன்பிருக்கும்போதுகூட வாடிய முகத்துடன் இல்லாமல் மகிழ்வுடன் செயல்படுமாறு இயேசு கேட்டுள்ளதற்கான காரணம், ஆன்மீக விடயங்களிலும் பிறரன்பு நடவடிக்கைகளிலும் நாம் தற்பெருமை அடையக் கூடாது என்பதற்கே என்றார்.
பல கிறிஸ்தவர்கள் வெளிப்பார்வைக்காக வாழும்போது அவர்களின் அந்தத் தோற்றம் சவக்கார நுரைக்குமுளிபோல் ஒருநொடியில் மறைந்துவிடுகிறது, சில கல்லறைகள்கூட வெறும் ஆடம்பரம் நிறைந்ததாக, தற்பெருமையின் சின்னங்களாக இருப்பதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்பெருமை என்பது ஒருவர் தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும், ஏனெனில் அது பொய்யானது, ஆனால் கடவுள் நம்பிக்கையே நிலையானது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்பெருமை என்பது ஒரு சோதனை, அதிலிருந்து உண்மையே நம்மை விடுவிக்கிறது எனவும் கூறினார்.
நாம் தற்பெருமையின் பிடிக்குள் விழாமல், என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்கும்வண்ணம் இறையருளை நாடுவோம் எனவும் விசுவாசிகளை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.