2014-09-24 15:14:06

செப்.25,2014. புனிதரும் மனிதரே : புனித அனகிலேத்துஸ் ( Saint Anacletus)


புனித அனகிலேத்துஸ் என்பவர் கத்தோலிக்க திருஅவையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் பேதுரு, அதன்பின் லைனஸ் ஆவர். மரபுச் செய்திப்படி, அனகிலேத்துஸ் உரோமையைச் சார்ந்தவர் என்றும் ஏறத்தாழ பன்னிரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுகிறது, அதாவது, கி.பி. 79லிருந்து 92 வரை பதவியிலிருந்தார். திருத்தந்தை அனகிலேத்துஸ் உரோமை மறைமாவட்டத்தை 25 பங்குத்தளங்களாகப் பிரித்தார் என்றும், ஒரு சிலரைக் குருக்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும் சில பண்டைய ஏடுகள் கூறுகின்றன.
திருத்தந்தை அனகிலேத்துஸ், வத்திக்கான் நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அவருக்குமுன் பதவியிலிருந்த திருத்தந்தை லைனஸ் என்பவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருத்தந்தை அனகிலேத்துஸ் எந்த நாளில் இறந்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், "உரோமை மறைச்சாட்சியர் நூல்" என்னும் ஏடு அவர் ஏப்ரல் 26ம் நாள் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.