2014-09-24 15:28:29

சித்ரவதைக் கருவிகளைத் தயாரிக்கும் சீன நிறுவனங்கள்


செப்.24,2014. சீனா, உலக நாடுகள் பலவற்றுக்கும் சித்ரவதை ஆயுதங்களையும், கருவிகளையும் விநியோகம் செய்து, கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதித்து வருகிறது என 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' எனப்படும், பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இப்பன்னாட்டு அமைப்பு, உலக நாடுகள் பலவற்றின் காவல்துறை, பயங்கரவாதிகள் போன்றோருக்கு, சித்ரவதை ஆயுதங்களை விநியோகம் செய்வது சீன நிறுவனங்கள்தான் என்று கூறியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில், 18 நிறுவனங்களாக இருந்த சித்ரவதைக்கருவி தயாரிப்புச் சீன நிறுவனங்கள், தற்போது, 130 ஆகப் பெருகியுள்ளன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் கருவிகள்தான் உலகம் முழுவதும் பயங்கரவாதிகள் மற்றும் கொடுமையான செயல்களில் ஈடுபடும் காவல்துறையிடம் உள்ளன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
மின்அதிர்ச்சிக் கருவிகள், அதிக எடையுடன்கூடிய கால் விலங்குகள், கை பெருவிரல்களில் பொருத்தக்கூடிய விலங்குகள், மின்அதிர்ச்சி இருக்கைகள், முள்கம்பு, ஆணி பொருத்திய தடிகள் போன்ற ஏராளமான சித்ரவதைக் கருவிகளை, சீனா பெருமளவில் தயாரித்து வருகிறது.
இத்தகைய பொருட்களின் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என, பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : BBC/Dinamalar







All the contents on this site are copyrighted ©.