2014-09-24 15:28:05

குண்டுகளை வீசுவோர் மக்களை விடுவிப்பவர்கள் அல்ல, அலெப்போ பேராயர்


செப்.24,2014. சிரியாவில் ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின்மீது, சில அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்டுள்ள வான்தாக்குதல்கள், சிரியாவின் அலெப்போ மக்களுக்கு எந்தவிதமான நல்ல பலன்களையும் அளிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அலெப்போ கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இம்மாதிரியான வெளிநாடுகளின் தலையீடுகள் நிலைமையை மோசமாக்கும் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, அலெப்போ அர்மேனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati அவர்கள், இங்கு என்ன நடக்கின்றது என்பது குறித்த தெளிவான கண்ணோட்டம் இங்குள்ள மக்களுக்குக் கிடையாது என்று கூறினார்.
குண்டுகளை வீசி கொடுஞ்செயல்புரிவோர் மக்களை விடுவிப்பவர்கள் என்று கூற முடியாது என்றுரைத்த பேராயர் Marayati அவர்கள், வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது, மாறாக, பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலை மேலும் மோசமடையும் என்றும், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றது, உணவு இல்லை, பலர் வீடுகளைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் Marayati.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.