2014-09-24 15:31:37

அமைதி ஆர்வலர்கள் : 1952ல் நொபெல் அமைதி விருது பெற்ற Albert Schweitzer


செப்.24,2014. 1952ல் நொபெல் அமைதி விருது பெற்ற Albert Schweitzer அவர்கள், மதம், இசை, கல்வி ஆகியவற்றுக்குத் தலைமுறைகளாக அர்ப்பணித்திருந்த Alsatian குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையும், தாய்வழி தாத்தாவும் லூத்தரன் கிறிஸ்தவ சபைப் போதகர்களாகப் பணியாற்றியவர்கள். இவரது தந்தைவழி மற்றும் தாய்வழி தாத்தாக்கள் இருவருமே மிகத் திறமையுடன் ஆர்கன் இசைக்கருவி வாசிப்பவர்கள். இவரது உறவினர்களில் பலர் சாதனை படைத்தவர்கள். 1875ம் ஆண்டு சனவரி 14ம் தேதி ஜெர்மனியின் Kaysersbergல் பிறந்த Albert Schweitzer அவர்கள் 1893ம் ஆண்டில் Strasbourg பல்கலைகழகத்தில் இறையியல் படிப்புக்காகச் சேர்ந்து Kant சமய மெய்யியல் குறித்து ஆய்வு செய்து, 1899ல் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1900மாம் ஆண்டில் இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்று, Strasbourgல் நிக்கோலாஸ் ஆலயத்தில் போதகப் பணியைத் தொடங்கினார். 1901ம் ஆண்டு முதல் 1912ம் ஆண்டுவரை Strasbourg பல்கலைக்கழகத்தில் இவர் படித்த புனித தாமஸ் கல்லூரியில் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தார். 1906ல், இவர் வெளியிட்ட, வரலாற்று இயேசுமீது தாகம் என்ற தலைப்பிலான ஆங்கில நூல் இவரது இறையியல் நிபுணத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது.
அதேநேரம், Schweitzer இசைப் பயணத்தையும் தொடர்ந்தார். இளவயதிலே இவர் கற்ற பியானோ, ஆர்கன் இசைக்கருவிகளை இசைப்பதைத் தொடர்ந்தார். இவர் தனது ஒன்பது வயதிலே இவரது தந்தையின் சபையில் ஆர்கன் வாசித்தார். அன்று முதல் எண்பது வயதைக் கடந்தும் ஆர்கன் இசைக்கச்சேரி நடத்தினார். இதில் பன்னாட்டு அளவிலும் இவர் புகழ் பெற்றிருந்தார். இதிலிருந்து தனது படிப்புக்கு, குறிப்பாக, தனது மருத்துவப் படிப்புக்கும், பின்னாளில் அவரது ஆப்ரிக்க மருத்துவமனைக்கும் பணம் சேர்த்தார். இசையியலில் நிபுணரான Schweitzer, 1905ல், ப்ரெஞ்ச் மொழியில் Bach அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், 1906ல் ஆர்கன் இசைக்கருவியை அமைப்பது மற்றும் அதனை வாசிப்பது பற்றியும், 1908ல் ஜெர்மன் மொழியில் Bach அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக வெளியிட்டார். கிறிஸ்தவப் போதகராக இருப்பதைவிட ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற விரும்பி, 1905ல் Strasbourg பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்தார். 1913ல் மருத்துவத்தில் M.D. பட்டம் பெற்று, ப்ரெஞ்ச் ஈக்குவிட்டோரியல் ஆப்ரிக்காவின் Lambarénéல் இவர் தனது மருத்துவமனையைக் கட்டினார். ஆயினும், முதல் உலகப் போரின்போது 1917ல் ஜெர்மானியரான இவரும் இவரது மனைவியும் போர்க் கைதிகளாக, ப்ரெஞ்ச் புதைகுழி முகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஏனெனில் இந்த ஊர் பிரான்சின் காலனியாக இருந்தது. இங்கு பணிசெய்த ஜெர்மானியர்களான இவர்கள் சிறையில் வைக்கப்பட்டு 1918ல் விடுதலை அடைந்தனர். பின்னர், Schweitzer அடுத்த ஆறு ஆண்டுகள் ஐரோப்பாவில் தனது பழைய சபையில் போதித்தும், இசைக்கச்சேரிகள் நடத்தியும், மருத்துவப் பயிற்சிகள் அளித்தும், ‘பண்டையக் காடுகளின் முனையில்’, ‘கலாச்சாரமும் நன்னெறிகளும்’, ‘கிறிஸ்தவமும் உலக மதங்களும்’ என்ற தலைப்புக்களில் நூல்கள் எழுதியும் நாள்களைச் செலவிட்டார்.
1924ல் ஆப்ரிக்காவின் Lambaréné கிராமத்துக்குத் திரும்பிய Schweitzer, குறுகிய காலம் தவிர தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அங்கேயே செலவிட்டார். தனது சொந்தப் பணியால் சேமித்த மற்றும் உலகெங்கிலுமிருந்து கிடைத்த உதவிகளைக் கொண்டு, இவர் அமைத்திருந்த இக்கிராம மருத்துவமனையை எழுபது கட்டிடங்களுக்கு விரிவுபடுத்தினார். 1960களின் தொடக்கத்தில் எந்த நேரத்திலும் ஐந்நூறுக்கு மேற்பட்ட நோயாளிகளைப் பாரமரிக்கும் நிலைக்கு இது விரிவடைந்தது. Lambarénéல் Schweitzer ஒரு மருத்துவராக, ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக, அக்கிராம கிறிஸ்தவ சபையின் போதகராக, மருத்துவமனை கட்டிட நிர்வாகியாக இருந்ததோடு, சிறந்த நூல்கள் எழுதுவது, அக்காலத்திய வரலாறு, இசை பற்றி விமர்சனம் எழுதுவது, எண்ணற்ற பார்வையாளர்களை வரவேற்பது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். 2ம் உலகப்போர் சமயத்திலும் இவர் இங்கு தொடர்ந்து பணியாற்றினார். Frankfurt Goethe விருது உட்பட பல கவுரவ விருதுகளையும் முனைவர் பட்டங்களையும் பல பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்றார். 1952ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டாலும், அது 1953ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதிதான் கொடுக்கப்பட்டது. அவ்விருதில் கிடைத்த 33 ஆயிரம் டாலர் பணத்தைக் கொண்டு Lambarénéல் தொழுநோயாளர் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். Albert Schweitzer, 1965ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி Lambarénéல் இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.