2014-09-23 14:21:27

விவிலியத் தேடல் – இரு தலைவர்கள், வானத்துப் பறவைகள், காட்டுமலர்ச் செடிகள் உவமை


RealAudioMP3 "ஒரு சில பொத்தான்களைக் காணோம்" (A Few Buttons Missing) என்பது 1951ல் James T.Fisher என்பவரால் எழுதப்பட்ட புத்தகம். மனநல மருத்துவரான Fisher தன் அனுபவங்களையெல்லாம் நகைச்சுவை கலந்து எழுதியுள்ளார். தான் வாழ்வில் கற்ற சில பாடங்களை, புத்தகத்தின் இறுதி பக்கங்களில் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பாடங்களில் ஒன்று இயேசுவின் மலைப்பொழிவைப் பற்றியது:
"உலகின் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள், அறிஞர்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களையும் ஒன்று திரட்டுவோம். அவற்றில் உள்ள தேவையற்ற வார்த்தைகளை எல்லாம் எடுத்துவிடுவோம். மனநலம் பற்றி ஆடம்பரமற்ற, கலப்படமற்ற உண்மைகளை எல்லாம் திரட்டினால், அவற்றில் இயேசு போதித்த மலைப்பொழிவின் சில பகுதிகளையாவது காணலாம்." என்று Fisher கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 33வது அரசுத் தலைவராக இருந்த Harry Truman சொன்ன கூற்றுகளில் ஒன்று இது: "மலைப்பொழிவு தரும் பாடங்களினால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, உலகிலோ இல்லை."
கிறிஸ்தவம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து, உலகத்தலைவர்களை, பெரும் அறிஞர்களைக் கவர்ந்துள்ள இயேசுவின் மலைப்பொழிவில் இயேசு பயன்படுத்திய உப்பு, ஒளி என்ற இரு உருவகங்களைச் சென்ற வாரம் சிந்தித்தோம். இன்று வேறு சில உருவகங்களைச் சிந்திக்க வந்துள்ளோம். இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்வது, வானத்துப் பறவைகளிடமிருந்தும், காட்டுமலர்ச் செடிகளிடமிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வது ஆகிய கருத்துக்களை உருவகங்கள் வழியே இயேசு கூறுகிறார்:
மத்தேயு நற்செய்தி 6: 24-34
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?... ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”
இந்த உருவகங்கள் வழியே இயேசு நமக்கு மூன்று அறிவுரைகளைத் தருகிறார்:

"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" என்று இயேசு கூறும் வார்த்தைகள் நாம் வாழும் இன்றைய உலகின் அரசியல் குறித்து நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நல்ல பண்புகள் உள்ள ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் பணியாளர், அத்தலைவன் மீது உள்ள மதிப்பினால், அன்பினால் அவருக்குப் பணிவிடை செய்வார். தலைவன் தரும் ஊதியம், அல்லது பிற பயன்கள் இவற்றைக் கணக்கிட்டுச் செய்யப்படும் பணிவிடை அல்ல இது. சில குடும்பங்களில் பல ஆண்டுகள் முழு விசுவாசத்துடன் பணிபுரிபவர்களைப் பார்த்திருக்கிறோம், அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தலைவனின் மகன் தலையெடுத்து வரும்போது, அவரிடம் தன் தலைவனிடம் இருந்த பண்புகள் இல்லையென்றால், பணியாளர் அவருக்கு உழைக்கத் தயங்கி விலகுவதையும் பார்த்திருக்கிறோம்.
இயேசு இன்றைய நற்செய்தியில் செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். "கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும் நம் அரசியல் தலைவர்கள் உள்ளூர ஏளனமாய்ச் சிரித்துக் கொள்வார்கள். இயேசு சொல்வதை மறுத்து இவர்கள் சொல்வது இதுதான்... ‘கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது’ என்று யார் சொன்னது... நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான், என்று சொல்பவர்கள் இவர்கள்.
"கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறியுள்ள இந்தக் கூற்று செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டதாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவற்றை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.
இயேசு கூறும் அடுத்த அறிவுரை: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
இந்த அறிவுரையை அழுத்திச் சொல்ல எனக்குச் சிறிது தயக்கம், பயம். என் உடன்பிறந்தோர், உற்றார், நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது நான் இயேசுவின் இந்த அறிவுரையை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவர்களில் பலர் எனக்குத் தந்த பதில் இதுதான்: "சாமி, உங்களுக்கென்ன, புள்ளயா, குட்டியா கவலைப்படுவதற்கு? கவலைப்பட வேண்டாம்னு நீங்க ஈசியா சொல்லிடுவீங்க. ஆனா, எங்க நிலைல இருந்தீங்கனாத் தெரியும்." இது அவர்களின் வாதம். நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். குடும்ப பாரங்கள் உள்ளவர்களின் கவலைகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. உண்மைதான். ஆனால், கவலைகளின் சுமைகளால் நமது உள்ளங்கள் நசுங்கிவிடாமல் காக்கும் வழிகளையும் சிறிது சிந்திப்பது நல்லதென்று நினைக்கிறேன். முயன்று பார்ப்போம்.
கடவுளையும், செல்வத்தையும் இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் ஒப்புமைப்படுத்தி பேசிய இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் ஒப்புமைப்படுத்துகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு நம்மைக் கவலைகளால் நாமே சூழ்ந்து கொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகள் விரைவில் நம்மை மூழ்கடிக்கும்.
Erma Louise Bembeck என்ற எழுத்தாளர் 1960களில் அமெரிக்க நகர வாழ்வைப் பற்றி சிறு, சிறு பகுதிகளாக நாளிதழ்களில் எழுதி வந்தார். பள்ளிக்குச் செல்ல பயந்த Donald என்ற சிறுவனைப் பற்றி Erma ஒரு நாள் எழுதிய ஒரு சிறு பகுதி இது:
"என் பெயர் Donald. எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய ஒரு பல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் இதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதால், இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. என் பள்ளியில் உள்ள உணவகத்தில் நாற்காலிகள் அதிக உயரமாய் இருந்தால், நான் எப்படி அதில் ஏறி அமர முடியும்? நான் பள்ளியில் முகம் கழுவும்போது, என் சட்டையில் குத்தப்பட்டுள்ள அட்டையில் தண்ணீர் பட்டு, என் பெயர் அழிந்துவிட்டால், என்ன செய்வேன்? ஆடிக் கொண்டிருக்கும் என் பல் வகுப்பு நடக்கும்போது, விழுந்துவிட்டால், என்ன செய்வேன்? கொட்டும் இரத்தத்தை யார் துடைப்பார்கள்?"
சிறுவன் Donaldன் இந்தக் கவலைப் பட்டியலை வாசிக்கும்போது, வயது முதிர்ந்துவிட்ட நமக்கு மனதில் ஒரு இலேசான கேலிச் சிரிப்பு எழுகிறது... இல்லையா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... எத்தனை முறை நாம் சிறுவன் Donald ஆக மாறியிருக்கிறோம், இன்றும் மாறி வருகிறோம். தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு நடிகர் மனநல மருத்துவரிடம் பட்டியலிடும் "பயங்கள்" நம் நினைவுக்கு வரலாம். "எனக்கு எல்லாம் பயமயம். கவிதை பயமெனக்கு... கதை பயமெனக்கு." என்று அந்த நடிகர் சொன்ன பட்டியல் நம்மில் சிரிப்பை வரவழைத்திருக்கலாம். ஆனால், அந்த பயங்கள் போலவே நாமும் எல்லாவற்றையும் கவலை மயமாக்குவதையும் சிந்திக்கலாம்.
"கவலைப்படாதீர்கள்" என்று மட்டும் இயேசு கூறிச் சென்றிருந்தால், அவருக்கென்ன... இறைமகன், பிரமச்சாரி... எளிதாகச் சொல்லிவிட்டார் என்று நாம் குறை கண்டுபிடித்திருப்போம். கவலை கொள்ளாமல் இருக்க இயேசு வழிகளையும் சொல்லியிருக்கிறார். கவலைக்குப் பதில் கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கவலைப்படுவதால் உங்களில் யார் தன் உயரத்தைக் கூட்டமுடியும் என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால் ஒருவேளை நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டே தவிர உயரத்தைக் கூட்ட முடியுமா என்று தெரியவில்லை.
உலகின் பல நாடுகளில், அதுவும் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது இன்றைய புள்ளிவிவரங்கள்.
கவலைப் படுவதால், உடல் உயரத்தைக் கூட்ட முடியாது, உடல் நலத்தையும் கூட்ட முடியாது. செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்ற வேண்டாம், அவைகளுக்குக் கோவில் கட்டவோ, அவைகளுக்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.
இயேசு இன்று நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆழமாய் பதிய வேண்டும். மிகவும் எளிதான, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை இது:
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.








All the contents on this site are copyrighted ©.