2014-09-23 16:14:03

மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பணிசெய்யுமாறு வலியுறுத்தல், கர்தினால் கிரேசியஸ்


செப்.23,2014. இந்தியாவில், மதங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித சமுதாயத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பணிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
“இந்தியாவில் பல்வேறு ஆன்மீக மரபுகள்” என்ற தலைப்பில் திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் புதுடெல்லியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ், மதங்களின் தலைவர்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை மறந்து, நாட்டின் வளர்ச்சிக்காகப் பணிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
வன்முறையும், போரும், வறுமையும், மனித மாண்புக்குத் தேவையான பொருளாதார நீதியும், மனித ஒருமைப்பாட்டுணர்வும், சுற்றுச்சூழலும், வெப்பநிலை மாற்றமும் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் ரெதிபுல்யா இராணுவக் கல்லறையில் பேசியதையும் குறிப்பிட்டார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தக் கூட்டத்தில், இந்து, கிறிஸ்தவம், புத்தம், இஸ்லாம், யூதம், சொராஸ்ட்ரியனிசம், சீக்கியம், ஜைனம் போன்ற மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.