2014-09-21 15:34:37

புனிதரும் மனிதரே : கொலைக்கு அஞ்சாதவர்( St.Maurice)


மூன்றாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசர் Maximian Herculius, தனக்கு அச்சுறுத்தலாக இருந்த Gaul இனத்தவருக்கு எதிராகப் போரிடுவதற்காக எகிப்தின் Thebes பகுதியிலிருந்து இராணுவத்தை வரவழைத்தார். இந்த எகிப்திய Theban இராணுவம், இத்தாலியின் Blanc மலையைக் கடந்து சுவிட்சர்லாந்திலுள்ள மூன்றாவது பெரிய சுரங்கப்பாதையான செயின்ட் பெர்னார்டு சுரங்கம் வழியாகச் சென்று போரிட வேண்டியிருந்தது. இப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், இப்போரின் வெற்றிக்காக, பேரரசர் Maximianக்கு மரியாதை செலுத்தி, அவரது தெய்வங்களுக்குப் பலிகொடுக்குமாறு இந்த Theban இராணுவத்தினரிடம் அதிகாரிகள் கூறினர். இதற்கு இந்த இராணுவத்தினர் மறுத்துவிட்டனர். அதோடு, சில உள்ளூர் கிறிஸ்தவர்களை வதைக்குமாறு பேரரசர் Maximian கூறியபோதெல்லாம், Theban இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்தனர். ஏனெனில் Theban இராணுவத்தின் 6,600 படைவீரர்களும் கிறிஸ்தவர்கள். எனவே கோபம்கொண்ட உரோமைப் பேரரசர் Maximian, இந்தப் படைவீரர்களில் பத்துப்பேருக்கு ஒருவர் வீதம் கொலை செய்யப்படுமாறு உத்தரவிட்டார். இதற்குப் பின்னரும் இவர்கள், அந்நியத் தெய்வங்களை வழிபட மறுத்தனர். மேலும் மேலும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அனைத்திலும் இவர்கள் தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததால் அந்த இராணுவத்தில் எஞ்சயிருந்த அத்தனைபேரையும் கொலைசெய்யுமாறு ஆணையிட்டார் பேரரசர் Maximian. இந்தப் படுகொலை நடந்த இடம் சுவிட்சர்லாந்தின் Agaunum என்று சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது Saint Maurice-en-Valais என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த எகிப்திய கிறிஸ்தவ இராணுவத்தின் 6,600 படைவீரர்களையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தியவர் அந்த இராணுவ அமைப்பின் தலைவர் Maurice. இவரோடு சேர்ந்து Exuperius, Candidus ஆகிய இரு அதிகாரிகளும் படைவீரர்களை ஊக்கப்படுத்தினர். மறைசாட்சிகளாக மரணமடைந்த படைவீரர்களின் உடைமைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்த விக்டர் என்ற கிறிஸ்தவரும், இன்னும் பிற கிறிஸ்தவர்களும் கொலைசெய்யப்பட்டனர். எகிப்திய Theban இராணுவ அமைப்பின் தலைவரான மறைசாட்சி புனித Mauriceன் விழா செப்டம்பர் 22. இவர், எகிப்தின் பழமையான நகரமான Thebesல் கி.பி. 250ம் ஆண்டில் பிறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.