2014-09-21 15:32:28

திருத்தந்தை : நீதியான வாழ்வை உருவாக்கித்தர நம்மை அர்ப்பணிப்பதற்கான அழைப்பை நாம் உணரவேண்டும்.


செப்.21,2014. தான் தேர்ந்துகொண்ட12 திருத்தூதர்களைத் தவிர மேலும் 72 சீடர்களை இயேசு அழைத்ததைப் பற்றிக் கூறும் ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக' என ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும்போதும் சீடர்கள் வாழ்த்துக்கூற வேண்டும் என இயேசு பணித்த வார்த்தைகளை மையக் கருத்தாக வைத்து கருத்துக்களை வழங்கினார்.
கல்கத்தாவின் அன்னை தெரேசாவின் இந்த மண்ணில் வாழும் உங்களுக்கும், இதே வார்த்தைகளுடன் வாழ்த்துச் சொல்ல ஆவல் கொள்கிறேன். இல்லத்திற்கும், உங்கள் உள்ளத்திற்கும் ,உங்கள் நாட்டிற்கும் அமைதி உண்டாகுக!
தன் 12 திருத்தூதர்களை மட்டுமல்ல, திருஅவை முழுவதையும் நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார் இயேசு. இந்நாட்டின் கடந்த காலங்களில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது பலமதங்களின் விசுவாசிகள் சித்ரவதைகளை அனுபவித்தார்கள். எண்ணற்ற கத்தோலிக்க மறைசாட்சிகளைத் துப்பாக்கி முனையில் நிறுத்திய இந்நாட்டின் Scutari மயானச் சுவரருகே ஆன்மீக முறையில் நான் நிற்கிறேன். இந்நாட்களில் இந்நாட்டில் மீண்டும் மறைபோதக உயிர்த்துடிப்பு கேட்கிறது. ஒவ்வொருவரும் அதனை உணரவேண்டும். நற்செய்தியை அறிவிக்கவும், பிறரன்பின் சாட்சியாக விளங்கவும், ஒருமைப்பாட்டின் தளைகளைப் பலப்படுத்தவும், அனைவருக்கும் நீதியான சகோதரத்துவ வாழ்க்கை நிலைகளை உருவாக்கித்தரவும் நம்மை அர்ப்பணிப்பதற்கான அழைப்பை நாம் உணரவேண்டும். உங்கள் முன்னோர்களின் சாட்சிய வாழ்வுக்கு நான் நன்றி கூறுகிறேன். அன்பு, விடுதலை, நீதி மற்றும் அமைதியின் பாதையில் நடைபோடும் உங்களுக்கு அந்த சாட்சிய வாழ்வு பலத்தைத் தருவதாக.
இவ்வாறு அல்பேனியத் தலைநகரில் நிறைவேற்றியத் திருப்பலியில் தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரன்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.