2014-09-20 15:51:30

திருத்தந்தை, லாட்வியா அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.20,2014. லாட்வியா குடியரசு, “மரியின் பூமி” என அறிவிக்கப்பட்டதன் 800ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்புவிடுத்தார் லாட்விய அரசுத்தலைவர் Andris Bērziņš.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய லாட்விய அரசுத்தலைவர் Andris Bērziņš அவர்கள், 2015ம் ஆண்டில் இடம்பெறும் இக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்குத் திருத்தந்தைக்கு அழைப்புவிடுத்தார்.
திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள், 1215ம் ஆண்டில் லாட்வியாவை அன்னைமரிக்கு அர்ப்பணித்து அந்நாட்டை மரியின் பூமி என அறிவித்தார். இந்நிகழ்வின் 800ம் ஆண்டு 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் லாட்வியா அரசுத்தலைவர் Bērziņš.
2015ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று ஐரோப்பிய சமுதாய அவையின் தலைமைப் பொறுப்பை லாட்வியா ஏற்கவுள்ளது உட்பட சில பன்னாட்டு விவகாரங்கள், லாட்வியாவுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், லாட்வியா நாட்டுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் நற்பணிகள் போன்றவை இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
உக்ரேய்னில் இடம்பெறும் பிரச்சனைக்கு, சட்டத்தின் அடிப்படையில் உரையாடல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும்படியாக இச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டது என்று அப்பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையுடன் சேர்ந்து மதிய உணவருந்தினார் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernandez de Kirchner. இவர் திருத்தந்தையை சந்திப்பது இது நான்காவது தடவையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.