2014-09-19 15:46:04

மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை செபம்


செப்.19,2014. செப்டம்பர் 21, வருகிற ஞாயிறன்று தான் மேற்கொள்ளவிருக்கும் அல்பேனியத் திருப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக இவ்வியாழன் மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மேரி மேஜர் பசிலிக்காவில், உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னைமரியிடம் அரைமணி நேரம் செபித்து, இறுதியில் மலர்க்கொத்தையும் அர்ப்பணித்தார் திருத்தந்தை.
திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னரும், திருப்பயணங்களை முடித்துத் திரும்பும்போதும் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருளாளர் அன்னை தெரேசா பிறந்த அல்பேனியா, 1967ல் தன்னை நாத்திக நாடாக அறிவித்தது. உலகில் முதல் நாத்திக நாடாக அறிவிக்கப்பட்ட அல்பேனியாவில் 1944 முதல் 1991 வரை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கம்யூனிச ஆட்சி நடந்தது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் சமய சுதந்திரம் இருந்து வருகின்றது.
மேலும், ரோஷ் ஹன்னா யூத புத்தாண்டு தினத்தையொட்டி, நாற்பது யூதமதத் தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இப்புதனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.