2014-09-18 16:25:35

நாட்டைக் கட்டியெழுப்ப சாட்சிய வாழ்வும் அர்ப்பணமும் அவசியம்


செப்.18,2014. தீவிரப்பிரிவினைகளால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ள ஒரு நாட்டை சகோதரத்துவத்தில் மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் தலத்திருஅவைத் தலைவர்களின் சாட்சிய வாழ்வும், உறுதியான அர்ப்பணமும் தேவைப்படுகின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த ஐவரி கோஸ்ட் ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகோதரத்துவ அன்பைத் திருடாமல், ஒருவர் ஒருவரை மதித்து, ஒருவர் ஒருவருக்கு செவிசாய்த்து, ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதன் மூலமே எதையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
அரசியல் பிரிவினைகளில் ஈடுபடாமலும், பொதுநலனை விட்டுக்கொடுக்காமலும் தேசிய ஒப்புரவுக்காக செயலாற்றவேண்டிய ஆயர்களின் கடமையை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கினார்.
குருத்துவப் பயிற்சிகளின் முக்கியத்துவம் குடும்பங்களுக்கான ஆதரவு, ஏழைகளுடன் ஒருமைப்பாடு போன்றவைகளையும் ஐவரி கோஸ்ட் ஆயர்களுக்கான தன் உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.