2014-09-17 16:32:33

மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துக, பாகிஸ்தான் திருஅவை


செப்.17,2014. பாகிஸ்தானில், செப்டம்பர் 18, இவ்வியாழனன்று Shoaib Sarwar என்ற முஸ்லிமுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனையை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கொலைக் குற்றம் தொடர்பாக 1998ம் ஆண்டில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட Shoaib Sarwar என்பவருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதன்மூலம் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்தண்டனை மீண்டும் செயல்படுத்துவதாக இருக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் இயக்குனர் Cecil Shane Chaudhry கூறினார்.
இவ்வியாழனன்று இம்மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு குடிமகனுக்கு நிறைவேற்றப்படும் மரணதண்டனையாக இது இருக்கும்.
இம்மரணதண்டனையை எதிர்த்து, ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.
பாகிஸ்தானில் தற்போது எட்டாயிரத்துக்கு அதிகமான மரணதண்டனை கைதிகள் உள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.