2014-09-17 16:32:14

எங்களைக் காப்பாற்றுங்கள், ஐ.நா.வில் மத்திய கிழக்குக் கிறிஸ்தவத் தலைவர்கள்


செப்.17,2014. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஸ்ஐஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் நடத்திவரும் படுகொலைகள் மற்றும் வன்கொடுமை அட்டூழியங்களிலிருந்து சிறுபான்மை இனத்தவரைப் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மத்திய கிழக்குத் திருஅவைகளின் தலைவர்கள்.
மத்திய கிழக்குப் பகுதியின் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவைகளின் முதுபெரும் தந்தையர்கள் ஜெனீவாவில் ஐ.நா. கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுள்ளனர்.
ஐஸ்ஐஸ் அமைப்பினரின் நடவடிக்கைகள் கடுமையாய்க் கண்டனம் செய்யப்பட்டு அவர்கள் தடைசெய்யப்படாவிடில், ஐஸ் கருத்துக்கோட்பாடு மனித உரிமைகளின் முழு அமைப்பையுமே சேதப்படுத்தும், வலுவற்ற மக்களின் பாதுகாப்புக்கு அது ஆபத்தை முன்வைக்கும் என்று முதுபெரும் தந்தையர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, ஐஸ்ஐஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கின் Mosul நகரில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று அந்நகர்ப் பள்ளிகளில் கலையோ இசையோ கிடையாது. வரலாறு, இலக்கியம், கிறிஸ்தவம் ஆகிய பாடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
ISIS என்பது Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.