2014-09-17 16:32:41

ஆப்ரிக்க தென்மண்டலப் பகுதியில், எய்ட்ஸ் நோயால் குடும்பங்கள் சிதைவு


செப்.17,2014. உலகில் எய்ட்ஸ் நோய் அதிகமாகப் பரவியுள்ள ஆப்ரிக்க தென்மண்டலப் பகுதியில், எய்ட்ஸ் நோயால் குடும்பங்கள் சிதறுண்டு துன்புறுகின்றன என்று அப்பகுதி ஆயர் ஒருவர் கூறினார்.
எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்துள்ள குடும்பங்களிலுள்ள பிள்ளைகளில் மூத்தவர்கள் தங்களின் தம்பி தங்கைகளைப் பராமரிக்கும் நிலைக்கு உட்பட்டுள்ளனர் எனவும், சில குடும்பங்களில் பாட்டிமார் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கின்றனர் எனவும், ஆப்ரிக்க தென்மண்டல ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் உதவித்தலைவர் ஆயர் Kevin Dowling கூறினார்.
எய்ட்ஸ் நோய்ப் பெற்றோரை இழந்துள்ள குடும்பங்களில் பெரும்பாலும் சிறுமிகளே தங்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் Rustenburg ஆயர் Kevin Dowling தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் ஏறக்குறைய ஒரு கோடியே 51 இலட்சம் சிறார் தங்களின் தாய்தந்தையரை அல்லது இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். ஜிம்பாபுவே நாட்டிலுள்ள அநாதைச் சிறாரில் 74 விழுக்காட்டினரும், தென்னாப்ரிக்காவில் 63 விழுக்காட்டினரும் எய்ட்ஸ் நோய்ப் பெற்றோரைக் கொண்டிருந்தவர்கள் என ஐ.நா. கூறுகிறது.
தென்னாப்ரிக்காவிலுள்ள ஏறக்குறைய 5 கோடியே 10 இலட்சம் மக்களில் 64 இலட்சத்துக்கு அதிகமானோர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.