2014-09-17 16:32:05

அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக உயர்த்தப்பட திருத்தந்தை அங்கீகாரம்


செப்.17,2014. இலங்கைத் திருஅவையின் தூணாக நோக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக உயர்த்தப்படுவதற்கு ஆதரவாக கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் குழு வழங்கிய வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அருளாளர்கள் ஜோசப் வாஸ், அமலமரியின் மரிய கிறிஸ்தினா ஆகிய இருவரின் புனிதர்பட்டம் குறித்த கர்தினால்கள் அவையை விரைவில் திருத்தந்தை கூட்டுவார் எனவும் இப்புதனன்று அறிவித்தது திருப்பீடம்.
இன்னும், அருளாளர் அமலமரியின் மரிய கிறிஸ்தினா, இறையடியார்கள் ஆல்பெர்த்தோ தெல் கொரோனா, மரிய எலிசபெத் துர்ஜியோன் ஆகியோரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கோவா மாநிலத்தின் Benaulinல் 1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்த அருளாளர் ஜோசப் வாஸ், 1711ம் ஆண்டு சனவரி 16ம் தேதி இலங்கையின் கண்டியில் காலமானார். புனித பிலிப்நேரி மறையுரையாளர்கள் சபையைச் சார்ந்த அருளாளர் ஜோசப் வாஸ், கோவா நகரில் புனித திருச்சிலுவை மறையுரையாளர்கள் அமைப்பை உருவாக்கியவர்.
மேலும், டச்சுக்காரர்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் இன்று இலங்கையில் கத்தோலிக்கத் திருஅவை உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது என்றால் அதற்கு அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களே காரணம் என்று, அண்மையில் கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.