2014-09-17 15:52:26

அமைதி ஆர்வலர்கள் : 1951ல் நொபெல் அமைதி விருது பெற்றவர் Léon Jouhaux


செப்.17,2014. 1951ல் நொபெல் அமைதி விருது பெற்ற Léon Jouhaux அவர்கள், ILO என்ற உலக தொழில் நிறுவனம் உருவாகுவதில் முக்கிய பங்கு வகித்தவர். இவர், அந்நிறுவன உறுப்பினர் அவையில் ஐ.நா.பிரதிநிதி, அனைத்துலக சுதந்திரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் உதவித் தலைவர், ப்ரெஞ்ச் தேசிய மற்றும் ஐரோப்பிய அவையின் அனைத்துலக குழுவின் ஆலோசகர், இப்படி பன்னாட்டு அளவில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். மனித உரிமைகளுக்காக பன்னாட்டு அளவில் குரல் கொடுத்தவரும், ப்ரெஞ்ச் தேசிய தொழில் இயக்கத்தின் தலைவராக நாற்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றியவருமான Léon Jouhaux அவர்கள், 1879ம் ஆண்டு ஜூலை முதல் தேதி பிரான்சின் பாரிசில் பிறந்தார். இவரது தாத்தா 1848ல் ப்ரெஞ்ச் புரட்சியில் ஈடுபட்டவர். இவரது தந்தை, ப்ரெஞ்ச்-புருசியப் போருக்குப் பின்னர் பாரிஸ் மாநகராட்சியில் பணி செய்தவர். இப்பணியில் குறைவான ஊதியம் கிடைத்ததால் அதைவிட்டுவிட்டு, Aubervilliersல் தீப்பெட்டித் தொழிற்சாலையின் தொழில் இயக்கத்தில் 1880ல் சேர்ந்தார். வேலை நிறுத்தத்தால் இவரது ஊதியம் கிடைக்காமல் தடைபட்டதால் Léon Jouhaux அவர்களும் 12 வயதுக்குமேல் படிப்பைத் தொடர முடியாமல் கைவிட்டு தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய நிலைக்கு உள்ளானார்.
1895ல், தனது 16வது வயதில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார் Léon Jouhaux. தொழிற்சங்கத்தில் முழு உறுப்பினராக ஆகுமுன்னரே அச்சங்கக் கூட்டங்களின் அறிக்கைகளைத் தயாரித்தார். அல்ஜீரியாவில் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இவரது தந்தை கண்பார்வை இழந்தார். இதனால் Jouhaux அல்ஜீரியாவிலிருந்து பாரிசுக்குத் திரும்பி தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தார். தீப்பெட்டித் தொழிற்சாலையில், விரைவில் ஆவியாகிற வெள்ளை பாஸ்பரசில் பல ஆண்டுகள் வேலை செய்ததுவே இவரது தந்தை கண்பார்வை இழந்ததற்குக் காரணம். எனவே வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை எதிர்த்து 1900மாம் ஆண்டில் இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் Jouhaux, முதன்முறையாகக் கலந்துகொண்டார். அதன் பயனாக அந்தக் காரியப் பொருள் தொழிற்சாலையிலிருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட Jouhaux, கரும்பு ஆலையிலும், கப்பல்துறையிலும் வேலை செய்தார். அதேநேரம் Sorbonneலும், Aubervilliers பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர்ந்தார். தொழிற்சங்கம் தலையிட்டதால் இவர் மீண்டும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். இவரின் அறிவு, ஆளுமை, சொற்பொழிவாற்றும் திறமை போன்றவற்றால் இவர் தொழிற்சங்கத் தலைவராகப் பணியைத் தொடர்ந்தார்.
C.G.T. என்ற தொழிற்சங்கப் பொது கூட்டமைப்புக்குத் தனது பிரதிநிதியாக, 1906ம் ஆண்டில் Jouhaux அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது தொழிற்சங்கம். 1909ல் இவர் C.G.Tன் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு இப்பொறுப்பில் 1947ம் ஆண்டுவரை இருந்தார். இதனாலே Jouhaux அவர்கள், «the General» என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் இவர் வகித்த இந்தப் பொறுப்பில் முதல் வேலையாக, தொழில் முன்வைக்கும் சவால்களைச் செயல்படுத்தத் தொடங்கினார். ப்ரெஞ்ச் தொழிலாளிகளுக்கு ஒரு நாளைக்கு எட்டுமணிநேர வேலை, ஊதியத்துடன் விடுமுறை, ஊதியத்துக்காகப் போராடுவதற்கு உரிமை போன்றவற்றை அங்கீகரித்த Matignon ஒப்பந்தத்தில் 1936ம் ஆண்டில் கையெழுத்திட்டவர் இவர். வணிகத் தொழிற்சங்கத்தின் கருத்துருவாக்கத்துக்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் Jouhaux.
முதல் உலகப் போருக்கு முன்னர் நலிவடைந்திருந்த அனைத்துலக உறவுகள் கண்டு அதிர்ச்சியடைந்த Jouhaux, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குச சென்று, அமைதிக்கான விடயங்களில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டுமென்பதை வற்புறுத்திப் பேசினார். நாடுகளுக்கிடையே பகைமைகள் வளர்ந்தபோது இவர் போருக்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். அதேநேரம், ஆயுதக் கட்டுப்பாடு, சர்வதேச அளவில் போர் ஒழிப்பு, இரகசிய உடன்பாடுகளின் முறிவு, நாடுகளை மதித்தல் ஆகியவற்றுக்கு அழைப்புவிடுக்கும் அமைதித் திட்டத்தை வளர்ப்பதற்கு C.G.T. தொழிற்சங்கக் கூட்டமைப்பை வழிநடத்தினார். 1916ல் Leeds கருத்தரங்கில் இவர் சமர்ப்பித்த அறிக்கையே பின்னாளில் ILO உலக தொழில் நிறுவனம் அமைக்கப்படுவதற்கு அடித்தளமாக இருந்தது. அதே ஆண்டில் ILO நிர்வாகக் குழுவின் தொழிலாளர் பிரதிநிதிகளில் ஒருவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மற்ற தொழிற்சங்கங்களில் Jouhaux முக்கிய பதவிகளை வகித்தார். 1919ல் அனைத்துலக தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் முதல் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அப்பதவியில் 1945ம் ஆண்டுவரை இருந்தார்.
1925 முதல் 1928 வரை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ப்ரெஞ்ச் பிரதிநிதி குழுவின் உறுப்பினராக இருந்தார் Jouhaux. ஆயுதக்கட்டுப்பாடு குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதில்சொல்லும் ஐ.நா. வரைவுத்தொகுப்பைத் தயாரித்ததில் இவருக்கு முக்கிய இடமுண்டு. 1946ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரையிலான காலத்தில், சுதந்திரமாக கழகங்கள் நடத்துவதற்கான மனித உரிமைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது உட்பட பல காரியங்கள் ஐ.நா.வில் நிறைவேற்றப்படுவதற்கு இவர் கடுமையாக முயற்சித்தார். 1949ல் ஐரோப்பிய இயக்கத்தின் தலைவரானார். இதுவே ஒருங்கிணைந்த ஐரோப்பா உருவாக உதவியது. C.G.T அமைப்பில் அரசியல் ஆதிக்கம் நுழையாதபடி இருப்பதற்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் உழைத்தவர் Jonhaux. 1939ல் 2ம் உலகப்போர் தொடங்கியபோது கம்யூனிசவாதிகளிடமிருந்து இவர் தன்னை துண்டித்துக்கொண்டார். இப்போரில் பிரான்சின் வீழ்ச்சியால், 1943ல் இவர் ஜெர்மனியின் Buchenwald சிறை முகாமுக்கு அனுப்பப்பட்டார். தனது 66வது வயதிலும் 25 மாதங்கள் நலமுடன் இருந்தார். 1954ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இவர் இறக்கும்வரை உயிராற்றலுடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டவர் Jouhaux. இவரது கல்லறை பாரிசின் Lachaiseல் உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.