2014-09-16 16:00:40

செப்டம்பர் 17, புனிதரும் மனிதரே – சுவர்கள் குளிரால் நோயுறப் போவதில்லை


அரசர்கள் பெற்றுள்ள அதிகாரம், இறைவனிடமிருந்து நேரடியாக வந்தது என்று பல அரசர்கள் கூறிவந்த கருத்து தவறு என்று துணிவுடன் சொன்னார், இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர். இதனால், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஆட்சிபுரிந்த பல அரசர்களின் கோபத்திற்கு இவர் உள்ளானார். இத்தகையத் துணிவுகொண்ட அருள் பணியாளரின் பெயர், இராபர்ட் பெல்லார்மின்.
இத்தாலியின் மோன்தேபுல்சியானோ (Montepulciano) என்ற ஊரில் 1542ம் ஆண்டு பிறந்தவர் இராபர்ட். உரோமையக் கவிஞர் வெர்ஜில் (Virgil) அவர்களின் புகழ்பெற்ற கவிதைகள் அனைத்தையும் சிறுவயதிலேயே மனப்பாடமாகச் சொல்லக்கூடிய அளவு அறிவுத்திறமை பெற்றிருந்தார், இராபர்ட்.
1560ம் ஆண்டு, தன் 18வது வயதில் இயேசு சபையில் இணைந்த இராபர்ட், இறையியல், திருஅவைத் தந்தையர், திருஅவை வரலாறு, ஆகியத் துறைகளில் தலைசிறந்த அறிவாற்றல் பெற்றிருந்தார். பெல்ஜியம் நாட்டில் மிகப் புகழ்பெற்றிருந்த Louvain பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முதல் இயேசு சபை அருள் பணியாளர் இவரே. 1576ம் ஆண்டு, உரோம் நகர் திரும்பிய இராபர்ட் அவர்கள், உரோமன் கல்லூரியில் பேராசியர் பணியைத் தொடர்ந்தார்.
தன் 60வது வயதில் பேராயராகவும், பின்னர், கர்தினாலாகவும் உயர்த்தப்பட்ட இராபர்ட் அவர்கள், வசதிகள் நிறைந்த கர்தினால் இல்லத்தில், எளிய வாழ்வை மேற்கொண்டார். அவரது இல்லத்தில் சுவர்களிலும், சன்னல், கதவுகளிலும் மாட்டப்பட்டிருந்த, வேலைப்பாடுகள் நிறைந்த கனமான திரைச் சீலைகளை எடுத்து எளியோருக்குத் தேவையான உடைகள் தயாரிக்கக் கொடுத்தார். இதுபற்றி கேள்வி எழுந்தபோது, கர்தினால் இல்லத்தில் சுவர்களும், சன்னல், கதவுகளும் குளிரால் நோயுறப் போவதில்லை என்று கர்தினால் இராபர்ட் அவர்கள் பதிலளித்தார்.
1621ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி, தன் 79வது வயதில் இறைவனடி சேர்ந்த இராபர்ட் பெல்லார்மின் அவர்களை, திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள் 1930ம் ஆண்டு புனிதராகவும், மறைவல்லுனராகவும் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.