2014-09-16 16:28:18

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளைக் கண்டித்து பங்களூருவில் பேரணி


செப்.16,2014. ஈராக், சிரியா மற்றும் ஆப்ரிக்காவில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் பங்களூருவில் நடந்த பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இஞ்ஞாயிறன்று நடந்த இப்பேரணியில் பேசிய பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள், இனப்படுகொலை, கொடூரமான சித்ரவதைகள், கொலைகள் போன்ற மனித சமுதாயத்துக்கு எதிரான இவ்வன்முறைகளுக்கு முன்பாக மௌனம் காக்கக் கூடாது என்று கூறினார்.
பங்களூருவில் அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் கலந்துகொண்ட இப்பேரணியின் இறுதியில், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, கர்நாடக ஆளுனரிடம் கண்டன மனு ஒன்றையும் சமர்ப்பித்தது.
ஈராக், சிரியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் கொலைகள் மற்றும் அடக்குமுறைகளைக் கண்டித்து குரல் எழுப்புமாறு, இந்தியாவின் இந்து, முஸ்லிம், சீக், ஜைனம், புத்தம், பார்சி ஆகிய மதத்தினரையும் கேட்டுள்ளது இக்கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு.
இதற்கிடையே, பாக்தாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.