2014-09-16 16:28:09

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஐ.நா.வால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்


செப்.16,2014. ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈராக் அரசின் இராணுவத்திற்கு உதவிசெய்வதற்கு பாரிசில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நல்ல காரியம் எனினும், எந்தவித இராணுவத் தாக்குதல்களும் ஐ.நா.வால் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று ஈராக் முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கருத்து தெரிவித்தார்.
பாரிசில், ஹாலந்து மற்றும் ஈராக் அரசால் வழிநடத்தப்பட்ட, ஈராக்கில் அமைதியும் பாதுகாப்பும் என்ற தலைப்பிலான அனைத்துலக கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு 25 நாடுகளின் கூட்டமைப்பு இசைவு தெரிவித்துள்ளது. இதன்படி ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக குறிப்பிட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், குண்டுகள் போடுவது பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது என்றும், வான்தாக்குதல்கள் நடத்துவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார்.
ஈராக்கில் உண்மையான ஒப்புரவு ஏற்படுவதற்கு இன்னும் நாள்கள் எடுக்கும் எனினும், புதிய ஈராக் அரசுக்கு ஆதரவு அளிக்கப்படுமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
மேலும், ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதியாக வைத்திருந்த பிரித்தானிய உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த காணொளியை கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இப்படுகொலைக்கு எதிரான தங்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் பிரித்தானிய கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் சபைத் தலைவர்கள்.
இது, ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மூன்றாவது படுகொலையாகும்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.