2014-09-16 16:27:59

ஈராக்கில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு உலகுக்கு அறநெறிக் கடமை உள்ளது, கர்தினால் Filoni


செப்.16,2014. ஈராக்கில் ஐஸ்ஐஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் நடத்திவரும் கடும் வன்முறைகள் போன்ற செயல்களுக்கு, கடவுளின் பெயரை எவரும் பயன்படுத்தமாட்டார்கள் அல்லது இச்செயல்களை கடவுளின் பெயரால் எவரும் நடத்தமாட்டார்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் பொதுப்படையாக மனிதர்களின் தலைகளை வெட்டும் கொடுஞ்செயல்கள் குறித்து CNN செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள், ஐஸ்ஐஸ் அமைப்பினரின் இச்செயல்கள் உண்மையில் சாத்தானின் செயல்கள் என்று குறை கூறினார்.
போர் வேண்டாம் என, திருத்தந்தை பல தடவைகள் பேசியுள்ளார், நாங்கள் தற்பொழுது போரைப் பற்றிப் பேசவில்லை, ஆனால் அவ்விடத்திலுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்புப் பற்றிப் பேசுகிறோம் எனவும் கூறினார் கர்தினால் Filoni.
பணமும், ஆயுதங்களும், மனிதர்களும், கருத்துக்கோட்பாட்டு மனங்களும் நிறைந்த பயங்கரவாதிகளைக் கொண்ட ஒரு குழு, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வித ஆயுதங்களும் இன்றி இருக்கும் அப்பாவி மக்களைத் தாக்குகின்றது என்றும் கூறினார் கர்தினால் Filoni.
ஈராக்கில் துன்புறும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு உலகுக்கு அறநெறிக் கடமை உள்ளது என்றும், பன்னாட்டு அளவில் பாதுகாப்பு இருந்தால், மக்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப இயலும் என்றும், ஈராக்கைப் பார்வையிட்டுள்ள கர்தினால் Filoni அவர்கள் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.