2014-09-15 16:20:53

வாரம் ஓர் அலசல் – குடும்பங்கள், சமுதாயத்தைக் கட்டும் செங்கற்கள்


செப்.15,2014 RealAudioMP3 . தமிழகத்தின் தேனி மாவட்டம் போடி நகரில் மாரியப்பன் என்பவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரத்ததானம் என்ற ஒரு சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று, விகடன் இதழில் கடந்த வாரத்தில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்தக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், இச்சேவையை, கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். இந்தச் சேவை, குடும்பச் சேவையாக மாறியதற்கான முடிச்சு விழுந்த நேரத்தை இக்குடும்பத்தின் மூத்த மருமகளான சரளா தேவி இவ்வாறு சொல்லியிருக்கிறார்....
''கல்யாணத்துக்கு முன்ன, ரத்ததானத்தோட சிறப்பு பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை என் மாமியாருக்கு உடம்பு முடியாமப் போனப்போ, ரத்தம் ஏத்தணும்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டுல எல்லாரும் தவிச்சுத்தேட, ஒரு வழியா குருதிக் கொடையாளி ஒருத்தர் கிடைச்சப்போ, எங்களுக்கெல்லாம் கடவுளைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், வீட்டுல எல்லாரும் ரத்தம் கொடுக்கிற பழக்கத்துக்கு வந்தோம்...' இதுக்குப் பிறகு, ஒருநாள் ஒரு பொண்ணுக்கு பிரசவ நேரத்துல அவசரமா ரத்தம் ஏத்தணும்னு சொல்ல, நான் போய்க் கொடுத்துட்டு வந்தேன். அதுதான் என்னோட முதல் அனுபவம். அவங்களோட அம்மா, கணவர் எல்லாம் கண்ணுல தண்ணியோட நன்றி சொன்னப்போ எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகள்ல சொல்லத் தெரியல. அதிலிருந்து சீரான இடைவெளியில் இரத்த தானம் பண்ணிட்டிருக்கேன். இப்பவும் ரோட்டுல போகும்போது, 'அன்னிக்கு எங்களுக்கு ரத்தம் கொடுத்தீங்களேனு யாராவது நன்றியோட வந்து பேசும்போது, சந்தோஷமா இருக்கும்!''
இப்படி அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் இரத்த தானம் செய்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தான் மட்டும் மகிழ்ந்து வாழ்ந்தால் போதாது, பிறரையும் மகிழ்வித்து வாழ வைக்க வேண்டும் எனச் சொல்வார்கள். இதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இத்தகைய குடும்பங்கள், சமுதாயத்தைக் கட்டும் செங்கற்கள் என்று நாம் துணிந்து சொல்லலாம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் இஞ்ஞாயிறு காலையில் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இருபது தம்பதியருக்குத் திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றினார். அப்போது அவர் ஆற்றிய மறையுரையில், குடும்பங்கள், சமுதாயத்தைக் கட்டும் செங்கற்கள் என்றும் கூறினார்.
RealAudioMP3 அன்று எகிப்தின் அடிமைத்தன வாழ்விலிருந்து இறைவன் காட்டிய நாட்டிற்கு நீண்ட நெடுநாள் பாலைநிலப் பயணம் சென்ற இஸ்ராயேல் மக்கள் குழுமம், குடும்பங்களால் ஆனது. அவர்கள் அந்தப் பயணத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் இன்றும் நம் குடும்பங்களின் அன்றாட வாழ்வின் அனுபவங்களாக உள்ளன. இன்று நமது குடும்பங்களில், இன்ப துன்பப் பகிர்வுகள், ஒருவர் ஒருவருக்கு உதவிகள் செய்தல் போன்றவை எவ்வளவுதூரம் ஆழமாக, அகலமாக நடக்கின்றன என்பதைச் சொல்ல இயலாது. ஆனால் நாம் மனிதர்களாக உருவாகுவதற்கு முதன்மை இடமாக இருப்பது குடும்பங்கள். அதேசமயம், குடும்பங்கள், சமுதாயத்தைக் கட்டும் "செங்கற்க RealAudioMP3 ள்". இஸ்ரயேல் மக்கள் தங்களின் பாலைநிலப் பயணத்தில் சில கட்டங்களில் பொறுமை இழந்து செயல்பட்டனர். இறைவன் காட்டிய தங்களது புதிய நாட்டுக்கானப் பயணத்தைக் கைவிட்டு, தங்களின் பழைய வாழ்வுக்கே திரும்பிவிடும் சோதனைக்கும் உள்ளாகினர். அதேபோல்தான் திருமணத் தம்பதியரும் தங்களின் திருமண மற்றும் குடும்ப வாழ்வில் நெருக்கடிகளைச் சந்திக்கும்போது பொறுமை இழக்கின்றனர். திருமண வாழ்க்கைப் பயணத்தில் கடினமான சூழல்களை எதிர்கொள்ளும்போது, மனதில் சோர்வடைந்து திருமணத்தின் நறுமணத்தை இழக்கின்றனர். அவர்களுக்கு அன்றாட வாழ்வு எரிச்சலூட்டி, உற்சாகமிழந்ததாக ஆகிவிடுகின்றது. இந்நேரங்களில் பாவங்களெனும் நச்சுப் பாம்புகள் வாழ்வில் ஊடுருவித் தம்பதியரைக் கடிக்கின்றன. ஆனால் அச்சமயங்களில் இறைவனின் அருளை, அவரின் உதவியை நாட வேண்டும். இந்த நச்சுப் பாம்பிலிருந்து இறைவன் காப்பாற்றுவார். இறைவனின் அன்பு கணவரையும் மனைவியையும் ஒன்றிணைத்து ஆசீர்வதித்து புனிதப்படுத்துகின்றது. திருமண வாழ்வைத் தாங்கிப் பிடிக்கின்றது. ஆயினும் திருமண வாழ்வுப் பாதை எப்போதும் மலர்ப்படுக்கையாக இருக்காது, இன்னல்கள், சவால்கள் இருக்கும்....
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள RealAudioMP3 ் புதுமணத் தம்பதியரிடம் கூறினார். திருமணத்தில் சண்டைகள் ஏற்படும், இதுதான் வாழ்க்கை. ஆனால் ஒருவருக்கொருவர் சமாதானமாகாமல் அன்றைய நாளை முடிக்காதீர்கள் என்று, இறுதியில் அவர்களுக்கு ஓர் அறிவுரையும் சொன்னார் திருத்தந்தை. பிரச்சனைகள் இல்லாத வாழ்வே கிடையாது. இதற்கு சரியான தீர்வு ஏற்பட வேண்டுமெனில் தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசுவது அவசியம். மனம் விட்டு பேசும்போது மனதில் இருக்கும் கசப்புகள், வெறுப்புகள், காயங்கள் மறைவதற்கு வாய்ப்பாக இருக்கும். இதுவே தம்பதிகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் வழியாகும். ஏனெனில், குடும்பங்கள் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் செங்கற்கள். ஒரு சமுதாயம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பவை குடும்பங்கள்.

ஒரு மரத்தின் ஆணிவேர் அறுபட்டால் அந்த மரம் தழைக்காது. அதன் சல்லி வேர்கள் சிதைந்து விட்டால் அந்த மரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் ஆதாரம் சரியாகப் போய்ச் சேராது. அதேபோல் மரம் மொட்டையாக நிற்பதால் எவருக்கும் பயனில்லை. மேலும், மரத்தின் கிளைகள் விரிந்தால்தான் பூக்கள் மலரும், காய்களும் கனியும். எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. மரம் வாழ்ந்தால் பூவும் கனியும் சமூகத்துக்குப் பயன்படும், மரம் இறந்தால் அதன் விறகு அனைவருக்கும் பயனாகும். ஆக, மரத்தின் வாழ்வே அடுத்தவருக்காகத்தான். அது நிழல்தேடும் மனிதருக்கு நிழலாகவும், அகதிகளாக வரும் பறவைகள் கூடுகட்டி வாழும் வீடாகவும் உதவுகிறது. அது, தன்னை வெட்டவரும் மனிதருக்கும் தயங்காமல் நிழல்தந்து பசியாற்றுகிறது. அது உயர உயர வளர்ந்தாலும், அதன் பண்பு, பணிவுதான் என்பதை உணர்த்த எப்போதும் அதன் கிளைகள் கீழ்நோக்கியே தாழ்ந்திருக்கும், ஒவ்வொரு குடும்பமும் ஒரு விரிந்த மரமே என்று விவரிக்கிறார் தமிழருவி மணியன்.
எல்லாக் குடும்பங்களுக்குமே தாய்-தந்தைதான் வேர்கள். இந்த வேர்களின் பிடிப்பில் விழாமல் நிற்கும் மரம்தான் பிறந்து வளர்ந்து ஆளாகி நிற்கும் மகன். அந்த மகனின் கரம் பற்றும் மனைவியே மரக்கிளை. அதில் மலரும் மலர்களும், கனிகளுமே பிள்ளைகள். அந்த மரத்தில் எங்கிருந்தோ வந்து குடியிருக்கும் பறவைகள்தான் உறவுகள். கிளைகள் இல்லாவிட்டால் கனிகள் இல்லை. அதேபோல் கிளையான மனைவி இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை. குடும்பம் இல்லாமல் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை. உறவுகள் இல்லாமல் மகிழ்ச்சியே கிடையாது. இந்தக் குடும்ப வாழ்வில் சில துன்பங்கள் நேர்ந்தாலும் இன்பத்துக்குக் குறைவே கிடையாது. எனவே குடும்பம் என்ற அமைப்பின்மீது, எந்த நிலையிலும் உறுதியாக இருக்கும் நிலை வேண்டும் என்றும் மணியன் அவர்கள் சொல்கிறார்.
மகாபாரதத்தில் ஒரு பெண்புறா பற்றி பீஷ்மர் சொன்ன கதை நமக்குத் தெரியும். பறவைகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்த வேடன் ஒருவன், ஒரு நாள் காட்டில் கடும் புயலில் மரத்திலிருந்து கீழே விழுந்து நடுங்கிக் கொண்டிருந்த பெண் புறா ஒன்றைக் கண்டான். அதைப் பிடித்து கையில் வைத்திருந்த கூண்டில் அடைத்தான். பெண் புறாவைப் பிரிந்த ஏக்கத்தில் ஆண் புறா மரக்கிளையில் அமர்ந்து புலம்பியது. துன்பப்படும் மனிதருக்கு மனைவியே உற்ற நண்பண். மனைவிக்கு ஈடாக, எந்த மருந்தோ, எந்த உறவோ இல்லை. என் மனைவியைக் காணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை எனப் புலம்பியது. அதன் அழுகை பெண் புறாவின் காதிலும் விழுந்தது. கணவனை மகிழ்ச்சிப்படுத்தாத மனைவி காட்டுத்தீயில் கருகிய மரத்தின் சாம்பலைப் போன்றவள் என அழுது புலம்பியது.
கணவன்-மனைவிக்கு இடையே நிலவவேண்டிய பாசப்பிணைப்பை அழகாகச் சொல்லும் கதை இது. குடும்பம் என்றால் இன்பம் இருக்கும், துன்பமும் இருக்கும். இன்பத்தை இருவரும் சேர்ந்து பகிர்ந்துகொள்ளும்போது அது பன்மடங்காகிறது. அதேபோல் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது பாதியாகக் குறைந்து விடுகிறது. உறவுகளும் ஆழப்படுகின்றன, மனக்கசப்புகளும் சிறிது சிறிதாக நீங்கத் தொடங்குகின்றன. எனவே திருமணப் பிணைப்பும், குடும்ப வாழ்வும் உறுதியாக நிலைத்து இருப்பதற்கு அடித்தளமாக அமைவது கணவன்-மனைவியிடையே நிலவும் உண்மையான அன்பு. இந்த அன்பில் பிறக்கும் பிள்ளைகளும் சிறந்து வளருவார்கள். அவர்கள் வாழும் சமுதாயமும் சிறந்தோங்கும்.
ஒரு குடும்பத்தில் பெற்றோர் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் மகன் திருமணமே வேண்டாம் எனச் சொல்லி வந்தான். பெற்றோரும் அவனிடம் விளக்கம் கேட்டு நச்சரித்தனர். அவன் அதற்குப் பதில் சொல்வதாய் இல்லை. ஆனால் ஒருநாள், அந்த மகனின் தாய் தனது கணவரிடம், நம்மைப் பார்த்துத்தான் அவன் இப்படி அடம்பிடிக்கிறான், நாம் இருவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் சண்டை போடுகிறோம். அதனால் இப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம் என அவன் முடிவெடுத்துவிட்டான்போலும் என்று சொன்னார்.
அன்பு நேயர்களே, பிள்ளைகளின் முன்பாக பெற்றோர் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்வதற்கு இதற்கு மேலும் விளக்கத் தேவையில்லை. அப்பா சிகரெட்டுப் புகையால் வட்டமடித்தால், மகன் சிகரெட்டுப் புகையால் மாவட்டமடிக்கிறான். ஒரு குடிகாரத் தந்தை, தனது குடிகார மகனுக்கு எப்படி நல்வழி காட்ட முடியும். எனவே பெற்றோரே நல்லதொரு குடும்பத்தை அமைக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது. நல்ல குடும்பம் ஒரு சமுதாயத்தைச் சமைக்கும் செங்கல்கள். இதற்கு உங்களின் சொந்த சக்தியை மட்டும் நம்பியிராமல் இறைவனின் உதவியையும் கேளுங்கள். ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.