2014-09-15 16:14:14

திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் இல்லை, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்


செப்.15,2014. செப்டம்பர் 21, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் அல்பேனிய நாட்டுக்கானத் திருப்பயணம் குறித்து இத்திங்களன்று பத்திரிகையாளர்களிடம் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.
இத்திருப்பயணம் குறித்து பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அல்பேனியாவில் திருத்தந்தையின் பாதுகாப்புக்கு சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கடும் நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியாகும் இவ்வேளையில் இவ்வாறு தெரிவித்தார் அருள்பணி லொம்பார்தி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பெருமளவான மக்களை வாழ்த்துவதற்கு திருத்தந்தை பயன்படுத்தும் திறந்த வாகனமே அல்பேனியாவிலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியாவுக்கு ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், திருத்தந்தை நீண்ட திருப்பயணங்களை விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வருகிற ஞாயிறு காலை 7.30 மணிக்கு உரோமிலிருந்து அல்பேனியாவுக்குப் புறப்படுகிறார் திருத்தந்தை. அந்நாட்டில் 14 மணி நேரங்கள் திருப்பயணத் திட்டங்களை நிறைவேற்றுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.