2014-09-15 16:13:08

திருத்தந்தை : திருச்சிலுவையை விசுவசிப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதாகும்


செப்.15,2014. மனிதகுலத்திற்கான இறையன்பை சிறப்பானவிதத்தில் வெளிப்படுத்திய திருச்சிலுவையையே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம், அச்சிலுவையை விசுவசிப்பது என்பது, இயேசுவைப் பின்பற்றுவதாகும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மீட்பின் ஆதாரமாக இருக்கும் திருச்சிலுவை, நமக்கான இறையன்பின் அடையாளமாகவும் உள்ளது என உரைத்த திருத்தந்தை, தீமையையும் மரணத்தையும் வெற்றிகண்டு, நமக்கு வாழ்வையும் நம்பிக்கையையும் திருச்சிலுவைக் கொணர்ந்துள்ளது என்றார்.
சிலுவை என்பது ஒரு மாயாஜாலமல்ல, மாறாக அது கடவுளுக்கும் அயலாருக்குமான அன்பிற்காக இயேசுவின் தியாகத்திலும், பாடுகளிலும், மரணத்திலும் பங்கேற்று, அவரின் மீட்பில் ஒத்துழைப்பதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் மோதல்களால் துன்புறும் மக்களுக்கு பிறரன்புப் பணிகளை ஆற்றச் செல்லும் ஐ.நா. அமைதிகாப்புப் படைக்கு தன் ஊக்க வார்த்தைகளையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சனிக்கிழமையன்று இத்தாலியிலுள்ள ஆஸ்திரிய-ஹங்கேரியக் கல்லறையை தரிசிக்கச் சென்றது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாம் உலகப்போரில் பலியானவர்களை அடக்கம் செய்துள்ள இத்தகைய கல்லறைகள், போரின் மடத்தனம் குறித்து நமக்குக் கற்பிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.