2014-09-13 16:55:10

புனிதபூமிக்குத் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், எருசலேம் ஆயர்கள்


செப்.13,2014. புனிதபூமிக்குச் செல்லும் திருப்பயணிகள், பாலஸ்தீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதியின் தூதுவர்களாக இருப்பதால், அப்பகுதிக்கு விசுவாசிகள் திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு தல ஆயர் பேரவைகள் ஊக்கப்படுத்துமாறு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் திருப்பயண ஆணைக்குழு கேட்டுள்ளது.
காசா முனைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல்களால் இடம்பெறும் மரணங்கள் மற்றும் அழிவுகளைப் பார்த்துத் தயங்காமலும், மாற்றுச் சிந்தனைக்கு இடம் கொடுக்காமலும் புனித பூமிக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, புனிதபூமிக்கு மேற்கொள்ளப்படும் திருப்பயணங்கள் அப்பகுதி கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அப்பகுதியில் எப்போதும் நடந்துவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் சண்டை முடிவுக்குவர உதவுவதாய் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
புனிதபூமிக்குச் செல்லும் திருப்பயணிகளை, அப்பகுதியின் கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவருமே நன்றாக வரவேற்பதாகவும், இத்திருப்பயணிகள், புனிதபூமிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உதவுகின்றார்கள் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.