2014-09-13 16:55:25

தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு ஆதரவு தேவை, ஐ.நா.


செப்.13,2014. வளரும் நாடுகளுக்கிடையேயும், அந்நாடுகளிலும் நிலவும் ஒத்துழைப்பு, சீரான வளர்ச்சியும் சமத்துவமும் ஏற்பட பாதை அமைக்கும் என, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
அனைத்துலக தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பு நாள், செப்டம்பர் 12 இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு கூறினார் பான் கி மூன்.
மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்கில் அண்மைக் காலத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகின் தெற்குப் பகுதியில் இந்த முன்னேற்றம் சமமாக இல்லை எனவும், இந்நாளுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
கடும் வறுமை, மட்டுமீறிய சமத்துவமின்மை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இன்னும் காணப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்.
வளரும் நாடுகளுக்கு மத்தியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் திட்டம் 1978ல் Buenos Airesல் கொண்டுவரப்பட்டதை நினைவுகூரும் விதமாக அனைத்துலக தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.