2014-09-13 16:19:46

திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் – ஞாயிறு சிந்தனை


செப்.13,201 RealAudioMP3 4. ஜூலை மாத இறுதியில், CNA எனப்படும் கத்தோலிக்க நாளிதழ் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. Court allows 9/11 Cross to remain at Ground Zero அதாவது, 9/11 சிலுவை, பூஜ்யப் பூமியில் தொடர்ந்து வைக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தியின் பின்னணியைப் புரிந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.
2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்க வரலாற்றில் ஆழமான காயங்களை உருவாக்கிய நாள். அன்று, பட்டப்பகல் வேளையில், நியூயார்க் நகரிலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் என்ற புகழுடன் கம்பீரமாக உயர்ந்து நின்ற இரு உலக வர்த்தகக் கோபுரங்களில், இரு விமானங்கள் மோதியதால் அவை தீப்பிடித்து, இடிந்து விழுந்தன. உலகத் தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் மீண்டும், மீண்டும் இந்நிகழ்வைக் காட்டியதால், மக்கள் மனங்களில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கின. செப்டம்பர் 11 என்ற தேதியை, 9/11 என்று அடிக்கடி குறிப்பிட்டதால், இந்த எண்ணும் உலக மக்களின் நினைவில் ஆழப் பதிந்த எண்ணாக மாறியது.
ஏறத்தாழ 3000 (2997) மக்களின் உயிர்களைப் பலிகொண்ட இந்த விபத்து நடந்த இடம், அதாவது, இவ்விரு மாபெரும் கோபுரங்களும் இடிந்து தரைமட்டமான அந்த இடம் Ground Zero, அதாவது, 'பூஜ்ய பூமி' என்று அழைக்கப்படுகிறது.
நியூயார்க் நகரின் பெருமையாக விளங்கிய இவ்விரு கோபுரங்களின் இடிபாடுகளை நீக்க பல மாதங்கள் ஆயின. இந்த இடிபாடுகளின் நடுவில், ஒரு எஃகு சட்டம், சிலுவை வடிவில் அமைந்திருந்ததை, Frank Silecchia என்ற தொழிலாளர் கண்டுபிடித்தார். 20 அடி நீளம் கொண்ட இந்தச் சிலுவை வடிவ எஃகு சட்டம், பூஜ்ய பூமியில் ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் அந்த சிலுவை வடிவத்தைச் சுற்றி மக்கள் கூடி செபிக்க ஆரம்பித்தனர். பலர் தங்கள் உள்ளக் குமுறல்களை விண்ணப்பங்களாக எழுதி, அந்தச் சிலுவை வடிவ சட்டத்திற்கருகே வைத்தனர்.
இவ்விதம், பல்லாயிரம் மக்களின் மனங்களில் வேண்டுதல் உணர்வுகளை எழுப்பிவந்த அச்சிலுவை, ஓராண்டுக்குப் பிறகு, பூஜ்ய பூமியில் உருவாக்கப்பட்ட ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. அது ஒரு கண்காட்சிப் பொருளாக மாறினாலும், தொடர்ந்து, அச்சிலுவை வடிவைச் சுற்றி மக்கள் கண்களை மூடி செபித்து வந்தனர். கடவுள் நம்பிக்கையற்ற அமெரிக்கர்கள் என்ற பெயர்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள், அந்தச் சிலுவை வடிவம், பூஜ்ய பூமி கண்காட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று 2011ம் ஆண்டு, வழக்கு தொடுத்தனர். கடவுள் நம்பிக்கையற்ற தங்களைப் போன்றோரின் உணர்வுகளை அச்சிலுவை புண்படுத்துகிறது என்ற வாதத்தை முன்வைத்து, அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்த வழக்கின் தீர்ப்பு, 2014, ஜூலை 28ம் தேதி வெளியானது. "இந்த மாபெரும் துயரத்தின்போது கிறிஸ்தவம் என்ற எல்லையை, மத நம்பிக்கை என்ற எல்லையைத் தாண்டி, பல்லாயிரம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதல் வழங்கிவந்த 9/11 சிலுவை, பூஜ்ய பூமி கண்காட்சியின் ஓர் அங்கமாக இருப்பது அர்த்தமுள்ளதுதான்" என்ற பாணியில் நடுவர்களின் தீர்ப்பு அமைந்திருந்தது. இன்றளவும் பூஜ்ய பூமி கண்காட்சியின் ஓர் அங்கமாக அச்சிலுவை வைக்கப்பட்டுள்ளது.
துன்பம் என்று வரும்போது, மதம், இனம், மொழி என்ற பல்வேறு எல்லைகளைத் தாண்டி, சிலுவை அடையாளம், ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு பொருள் தந்தவண்ணம் உள்ளது. சிலுவை ஓர் அர்த்தமுள்ள அடையாளம்தான் என்பதை உலகறியப் பறைசாற்றும் திருநாளை இஞ்ஞாயிறன்று நாம் கொண்டாடுகிறோம்.
உரோமையர்கள் கண்டுபிடித்த மரணதண்டனைகளிலேயே மிகக் கொடுமையானது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதைபட்டு சாவார்கள். இந்த மரண வேதனையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளிவரும். தங்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும்.
அந்த வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகளே அந்தச் சிலுவை மரணத்தை உன்னத நிலைக்கு உயர்த்தியது. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34)
நமது வழிபாட்டு ஆண்டின் 24வது ஞாயிறுக்குப் பதிலாக, நாம் திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாளைக் கொண்டாடுகிறோம். இந்த 24வது ஞாயிறுக்கு உரிய நற்செய்திப் பகுதியில், (மத்தேயு 18 21-35) இயேசுவுக்கும், பெதுருவுக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலைக் காண்கிறோம். தவறு செய்யும் உடன்பிறந்தோரை, "ஏழுமுறை மன்னித்தால் போதுமா?" என்ற பாணியில் பேதுரு கேட்கும்போது, இயேசு அவரிடம், “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை” என்ற அற்புதமான பதிலைத் தருகிறார்.
இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு சொல்லப்பட்டுள்ள எண்கள் கணக்கைத் தாண்டியவை. யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதைப் போன்று அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கச் சொன்னார்.
இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.” இவ்விதம் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.
இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவருக்கு இயல்பாகவே நடந்தன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்னார். மன்னிப்பு, மரணத்தை வென்றுவிடும் என்பதற்கு, இறைமகன் இயேசு சிலுவையில் தன் இரத்தத்தால் எழுதிய மரண சாசனம் ஓர் எடுத்துக்காட்டு. இதனால்தான், நாம் சிலுவை என்ற கொடுமையான கொலைக்கருவியை 20 நூற்றாண்டுகளாக இத்தனை மரியாதையுடன் வணங்குகிறோம்.
சிலுவையில் நாம் பெருமைப்படுகிறோம், சிலுவைக்கு ஒரு திருநாள் கொண்டாடுகிறோம் என்பதைக் காணும் அன்றைய உரோமையர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர். ஒரு கொலைக்கருவிக்கு இத்தனை மதிப்பா என்பதை அவர்களால் புரிந்திருக்க முடியாது. அதேபோல, இன்றைய உலகிலும் இத்திருநாளை, பலர் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேதனைக்கு ஏன் இவ்வளவு உயர்வான இடத்தை கிறிஸ்தவர்கள் தருகின்றனர் என்ற சந்தேகம் எழும். வேதனைக்குக் கோவில் கட்டுவதோ, வேதனையைப் பீடமேற்றுவதோ இத்திருநாளின் பொருளல்ல. சிலுவையின் வேதனைகளைவிட, அந்த வேதனைகளை வென்ற கிறிஸ்துவின் அன்பைக் கொண்டாடவே இந்தத் திருநாள்.
மனித இயல்பின் ஓர் அங்கமாக விளங்குவது வேதனை. குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையில் தாய் அனுபவிப்பது வேதனை. அக்குழந்தை வளரும்போது, தாயும், தந்தையும் உடலாலும், மனதாலும் அனுபவிப்பது பல துன்பங்கள். குழந்தையின்மீது தாயும், தந்தையும் கொண்டிருக்கும் அன்பு, இத்துன்பங்களையெல்லாம் பெரிதுபடுத்துவது இல்லை. அல்லது, இத்துன்பங்களுக்கெல்லாம் பொருள் தருகிறது. குழந்தை மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்புக்கு, அவர்கள் மனமுவந்து தரும் விலையே... இத்துன்பங்கள்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு, தச்சு வேலை செய்தவர் என்பது வேறொரு கோணத்தில் இத்திருநாளை எண்ணிப் பார்க்க உதவுகிறது. நாசரேத்தில் தன் தச்சுப் பணிகளைச் செய்துவந்த இயேசு, எத்தனையோ மரங்களை அறுத்து, அவற்றைத் தன் தோள்களில் சுமந்துவந்து, அந்த மரங்களைக் கொண்டு பல பயனுள்ளப் பொருள்களை உருவாக்கியிருப்பார். ஆனால், கல்வாரிப் பாதையிலோ அவர் தோள்மீது சுமத்தப்பட்ட மரம் அவர் உயிரைப் பறிக்கப்போகிறது என்பதை அறிந்து வேதனைப்பட்டிருப்பார். மனிதர்கள் தங்கள் வன்முறை வெறிக்கு மரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டு, இயேசு வேதனை அடைந்திருப்பார். மரங்களுக்கு மனிதர்கள் இழைத்த அவமானத்தைப் போக்கும் எண்ணத்துடன், தான் சுமந்துவந்த சிலுவை மரத்தை அவர் புனிதமானப் பொருளாக மாற்றினார். மரத்தைக் கொண்டு நல்லவற்றை மட்டுமே செய்யக்கூடிய தச்சராக வாழ்ந்த இயேசு இறுதிவரை நன்மையை மட்டுமே உருவாக்க நினைத்தார். தச்சராக இயேசு செய்த ஓர் அற்புதம், உவமைவடிவில் சொல்லப்பட்டுள்ளது:
அருகருகே நிலங்களைக் கொண்டிருந்த இரு சகோதரர்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாய் வேளாண்மை செய்துவந்தனர். திடீரென எழுந்த ஒரு சிறு பிரச்சனையால், அவர்களிடையே பெரும் பிளவு உருவானது. ஒரு நாள் காலை, அண்ணன் வீட்டுக்கு ஒரு தச்சர் வந்தார். தனக்கு ஏதாவது வேலை தரமுடியுமா என்று அண்ணனிடம் கேட்டார். அண்ணன் அவரிடம், "எனக்கு ஒரு முக்கிய வேலையை நீர் செய்யவேண்டும். அதோ, அங்கு தெரிகிறதே... அது என் தம்பியுடைய நிலம். அவனுடைய நிலத்திற்கும், என் நிலத்திற்கும் இடையே அழகான வாய்க்கால் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. போனவாரம், என் தம்பி ஒரு 'புல்டோசரை' வைத்து, அந்த வாய்க்காலை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, இப்போது ஒரு பள்ளத்தாக்கையே உருவாக்கிவிட்டான். என்னை அவமானப்படுத்துவதற்கென்றே அவன் இதைச் செய்திருக்க வேண்டும். அவனுக்கு நான் ஒரு பாடம் புகட்ட வேண்டும். என் வீட்டுக்குப் பின்பக்கம் கட்டைகளை அடுக்கிவைத்துள்ளேன். அவற்றைக் கொண்டு, நீர் அந்தப் பள்ளத்தாக்கிற்கு அருகே உயர்ந்ததொரு வேலியை எழுப்பவேண்டும். இனி நான் என் தம்பியின் நிலத்தையே பார்க்கமுடியாதவாறு அந்த வேலியை உயரமாக எழுப்பவேண்டும்" என்று சொல்லி முடித்தார்.
அண்ணன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தச்சர், "உங்கள் நிலை எனக்கு புரிகிறது. அந்தக் கட்டைகளை என்னிடம் காட்டுங்கள், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறினார். வீட்டுக்குப் பின்புறம் அடுக்கி வைத்திருந்த கட்டைகளை தச்சரிடம் காட்டிய அண்ணன், ஏதோ ஒரு வேலையாகப் புறப்பட்டு, ஊருக்குள் சென்றார்.
மாலையில் அண்ணன் வீடுதிரும்பியபோது, அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவர் சொன்னபடி, உயர்ந்த வேலியை எழுப்புவதற்குப் பதில், தச்சர், அந்தப் பள்ளத்தாக்கை இணைத்து, அழகான ஒரு பாலத்தை உருவாக்கியிருந்தார். அது மட்டுமல்ல, அந்தப் பாலத்தின் மறுமுனையில், அண்ணனின் வரவுக்காக, தம்பி காத்திருந்தார்.
அண்ணனைக் கண்டதும், தம்பி அந்தப் பாலத்தைக் கடந்து ஓடோடிவந்து, அண்ணனை அணைத்துக்கொண்டு, "அண்ணா, நான் செய்த முட்டாள்தனத்தை பெரிதுபடுத்தாமல், இவ்வளவு அற்புதமான ஒரு காரியம் செய்ய, உங்களுக்கு எப்படி மனம் வந்தது?" என்று கண்ணீருடன் கேட்டார்.
அண்ணனும், தம்பியைக் கண்ணீரோடு அணைத்தபடி, அருகில் நின்ற தச்சரைப் பார்த்தார். தச்சரோ அங்கிருந்து புறப்படுவதற்குத் தயாரானார். அண்ணன் அவரிடம், "நில்லுங்கள். நீங்கள் போகக் கூடாது. இன்னும் பல வேலைகள் இங்கு உங்களுக்காகக் காத்திருக்கின்றன" என்று கூறினார். தச்சரோ அவரிடம், "இங்கு தங்குவதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால், நான் இன்னும் பல இடங்களில் பாலங்கள் கட்டவேண்டியுள்ளதே!" என்று சொல்லியவண்ணம் ஒரு புன்முறுவலுடன் கிளம்பினார்.
மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் இறைவனிடமிருந்தும் பிற மனிதர்களிடமிருந்தும் தங்களைப் பிரித்துக்கொள்ள ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறார்கள். இறைமகன் இயேசுவோ, சிலுவையைக் கொண்டு, அந்தப் பள்ளத்தாக்கை இணைக்கும் ஒரு பாலத்தை உருவாக்கி, மனிதர்களை இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் ஒப்புரவாக்குகிறார். இந்த அற்புதத்தை நாம் கொண்டாடவேண்டாமா?
துன்பங்களுக்கு தன்னிலேயே எந்த மதிப்பும் கிடையாது. ஆனால், அன்புக்கு விலையாக துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அவை மதிப்பு பெறுகின்றன என்பதை இவ்வுலகிற்கு பறைசாற்றும் விழா திருச்சிலுவைத் திருநாள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.