2014-09-13 16:54:39

Fogliano ஆஸ்ட்ரிய-ஹங்கேரி இராணுவக் கல்லறையில் திருத்தந்தை செபம்


செப்.13,2014. வடகிழக்கு இத்தாலியின் Redipuglia இராணுவக் கல்லறைக்கு அருகிலுள்ள ஆஸ்ட்ரிய-ஹங்கேரி Fogliano இராணுவக் கல்லறையிலும் செபம் செய்து மலர்வளையம் ஒன்றையும் வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விடத்தில் ஏறக்குறைய 14 ஆயிரம் ஆஸ்ட்ரிய-ஹங்கேரியப் படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஒரு இலட்சத்தின் நினைவுச்சின்னம்” எனவும் அழைக்கப்படும் 'Redipuglia' இத்தாலிய இராணுவக் கல்லறையில், 39,857 இத்தாலியப் படைவீரர்கள் மற்றும் 69,330 அடையாளம் தெரியாத படைவீரர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.
சுலோவேனியா நாட்டு எல்லையில், இத்தாலியின் Gorizia மாவட்டத்திலுள்ள 'Redipuglia', முதல் உலகப் போரின்போது முக்கிய போர்க்களமாக அமைந்திருந்தது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தைவழி தாத்தா Giovanni Carlo Bergoglio அவர்கள், முதல் உலகப் போரின்போது 'Redipuglia' போர்க்களத்தில் போரிட்டதன் நினைவாக, சான்றிதழ் ஒன்றும் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது. Giovanni Carlo Bergoglio அவர்கள், அர்ஜென்டீனா நாட்டுக்குக் குடிபெயருவதற்கு முன்னர் இப்போர்க்களத்தில் போரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்ட்ரிய-ஹங்கேரிப் பேரரசின் வாரிசு இளவரசர் Franz Ferdinand அவர்கள், 1914ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி Sarajevoவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து பெரிய போர் எனப்படும் முதல் உலகப்போர் ஆரம்பமானது.
இச்சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு Redipuglia சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பயணத்தை முடித்து பகல் 12.50க்கு உரோம் திரும்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.