2014-09-12 16:29:26

திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசிகளுக்கு விவிலியத்துக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்


செப்.12,2014. திருவிவிலியத்துக்கு விளக்கம் இன்றி விசுவாசிகள் அதைப் புரிந்துகொள்வது தடுமாற்றத்தைக் கொணரும் மற்றும் இறைவனால் உள்தூண்டுதல் பெற்ற மறைநூல்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் என்பதால், திருவிவிலியத்துக்கு விளக்கம் அளிப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய விவிலிய கழகத்தால் நடத்தப்படும் 43வது தேசிய விவிலிய வாரத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, திருவிவிலியத்துக்கு விளக்கம் அளிப்பது, திருஅவையிலும் உலகிலும் இன்றியமையாத பணியாக உள்ளது என்றும் கூறினார்.
இறைஏவுதலால் எழுதப்பட்ட மறைநூல்கள் மீது உண்மையான மதிப்பு ஏற்படுவதற்கு, அவை கூறும் பொருளை நன்றாகப் புரிந்துகொள்ளுமாறு செய்வதற்கு எல்லா வகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவிவிலியத்திலுள்ள ஒவ்வொரு பகுதியையும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ஆய்வை மேற்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவராலும் இயலாது என்றுரைத்த திருத்தந்தை, திருவிவிலியப் பகுதிகளுக்கு மனிதக் கண்ணோட்டத்தில் விளக்கம் அளிக்கப்படுவதற்கு எதிராக எப்போதும் கருத்தாய் இருக்குமாறு விவிலிய வல்லுனர்களை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.