2014-09-12 15:28:57

செப்.13,2014 புனிதரும் மனிதரே: மனிதரின் நிறம் பார்ப்பதில்லை இறைவன் (Blessed Jacques-Désiré Laval)


இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மொரீசியஸ் தீவு நாட்டில் 1835ம் ஆண்டு பிப்ரவரியில் அடிமை ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் அந்நாட்டில் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலையடைந்த கறுப்பின மக்களுக்கு மறைப்பணியாற்றுவதற்காக அருள்பணி Jacques-Désiré Laval அவர்கள் 1841ம் ஆண்டு தனது தாயகமான பிரான்சிலிருந்து சென்றார். அச்சமயத்தில் அந்நாட்டில் 75 விழுக்காட்டினர், அதாவது விடுதலையடைந்த ஏறக்குறைய 90 ஆயிரம் கறுப்பின மக்கள் வாழ வழி தெரியாமல் இருப்பதையும், குடியேறிகளான வெள்ளையர்களுக்காக ஒன்பது அருள்பணியாளர்களும் இருப்பதைக் கண்டார் அருள்பணி Jacques Laval. மேலும், வெள்ளையர்களால் பாலின வன்கொடுமைக்கு ஆளான கறுப்பினப் பெண்கள், மதுவுக்கு அடிமையான நோயாளிகள், படிப்பறிவற்ற ஏழைகள் என கறுப்பின மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்க உறுதி பூண்டார் அருள்பணி Jacques Laval. இவர் படித்திருந்த மருத்துவம் இவரது மறைப்பணிக்குப் பெரிதும் உதவியது. இவர், இம்மக்களின் மொழியைக் கற்று, ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தார். உணவு இல்லாதபோது பட்டினி கிடந்தார். நற்செய்திப் பணியோடு, வேளாண்மை, நலவாழ்வு, மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகளிலும் கறுப்பின மக்களுக்கு உதவினார் அருள்பணி Jacques Laval. கறுப்பினத்தவரும் கடவுளின் குழந்தைகளே, கறுப்பு எந்த விதத்திலும் வெறுப்புக்கு உரியதல்ல என்ற மனநிலையை எல்லாரிலும் பரப்பினார் இவர். 500 பேருக்குக் குறைவான எண்ணிக்கையுடன் பங்குப் பணியைத் தொடங்கிய இவரது நற்பணிகளால் 67 ஆயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தூய ஆவியார் சபையைச் சேர்ந்த அருள்பணி Jacques Lava அவர்கள் தனது 60வது வயதில் 1864ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மொரீசியஸில் காலமானார். 23 ஆண்டுகள் மொரீசியஸ் தீவில் மறைப்பணியாற்றிய அருள்பணி Jacques Lava அவர்கள் அத்தீவின் திருத்தூதர் என அழைக்கப்படுகிறார். இவரை 1979ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அருளாளராக அறிவித்தார் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால். இத்திருத்தந்தை அறிவித்த முதல் அருளாளர் இவர்.
1803ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பிரான்சின் நார்மண்டி மாநிலத்தில் Croth எனும் ஊரில் பிறந்த Jacques-Désiré Laval, 7 வயதில் தாயை இழந்தார். குருத்துவமா? மருத்துவமா? என்ற நிலையில் பாரிசில் 27வது வயதில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். ஒரு முறை குதிரையில் செல்லும்போது தவறி விழுந்தார். அந்நிகழ்வில் இறைவனது அழைப்பை உணர்ந்து குருத்துவ வாழ்வைத் தேர்ந்துகொண்டார் அருளாளர் அருள்பணி Jacques Lava.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.