2014-09-12 16:30:12

கடவுளன்பு மனிதர்மீதான அன்போடு தொடர்புடையது என்பதை செப்.11 நினைவுபடுத்துகிறது, டென்வர் பேராயர்


செப்.12,2014. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று இடம்பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல், வெறுப்புக்குப் பதிலாக, அன்பைத் தேர்ந்துகொள்ள மனிதருக்கு அழைப்புவிடுக்கின்றது என்று டென்வர் பேராயர் சாமுவேல் அக்குய்லா அவர்கள் கூறினார்.
இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, நியுயார்க் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதன் 13ம் ஆண்டு நிறைவையொட்டி பேசிய பேராயர் அக்குய்லா அவர்கள், அத்தாக்குதலில் இறந்தவர்களுக்காக வருந்தும் அதேவேளை, உடன்வாழும் மனிதரை வெறுப்பது, கடவுளை வெறுப்பதற்கு இட்டுச் செல்லும் என எச்சரித்துள்ளார்.
மனிதரை வெறுத்துவிட்டு கடவுளை அன்புகூர இயலாது என்றும், கடவுளன்பும் மனிதர்மீதான அன்பும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் கூறினார் பேராயர் அக்குய்லா.
வெறுப்புணர்வு, மதத்தைச் சீர்குலைப்பதற்கு உரமிடுகின்றது மற்றும் அது வன்முறையில் வைக்கின்றது, இதைத்தான் செப்டம்பர் 11ம் தேதி கண்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்கப் பேராயர் அக்குய்லா.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.